I


திருமணப் படலம்413



தேவர்க டேவன் வந்தான் செங்கண்மால் விடையான் வந்தான்
மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கணெம் பெருமான் வந்தான்
பூவல ரயன்மால் காணாப் பூரண புராணன் வந்தான்
யாவையும் படைப்பான் வந்தா னென்றுபொற் சின்ன மார்ப்ப.

     (இ - ள்.) தேவர்கள் தேவன் வந்தான் - தேவர்களுக்கெல்லாம்
தேவனாயுள்ளான் வந்தருளினான்; செங்கண்மால் விடையான் வந்தான் -
சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தையுடையவன் வந்தருளினான்;
மூவர்கள் முதல்வன் வந்தான் - மூன்று கடவுளர்க்கும் முதல்வனாயுள்ளவன்
வந்தருளினான்; முக்கண் எம்பெருமான் வந்தான் - மூன்று கண்களையுடைய
எம் பெருமான் வந்தருளினான்; பூ அலர் அயன் மால் காணா - தாமரை
மலரில் வதியும் பிரமனும் திருமாலுங் காணாத, பூரண புராணன் வந்தான் -
எங்கும் நிறைந்த பழையோன் வந்தருளினன்; யாவையும் படைப்பான் வந்தான்
- எல்லாவற்றையும் ஆக்குவான் வந்தருளினான்; என்று பொன் சின்னம்
ஆர்ப்ப - என்று பொன்னாலாகிய சின்னங்கள் ஒலிக்க எ - று.

     மூவர்கள் - படைத்தல், காத்தல், அழித்தல் புரியும் மும்மூர்த்திகள்;
இறைவன் மூவர்க்கும் முதல்வனென்பதனை,

"தேவர்கோ வறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன்"

என்னும் திருவாசகத்தானுமறிக. பூவலர் என்பதற்கு அழகிய அலரென்றும்,
பூவிற்றோன்றிய வென்றும் உரைத்தலுமாம். ஒரு பொருள் மேற் பல பெயர்
வந்த விடத்துத் தனித்தனி வினை கொடுக்கப்பட்டது. (114)

பபெண்ணினுக் கரசி வாயிற் பெருந்தகை யமைச்ச ரேனை
மண்ணினுக் கரசர் சேனை மன்னவர் பிறரு மீண்டிக்
கண்ணினுக் கினியான் றன்னைக் கண்டெதிர் கொண்டு தாழ
விண்ணினுக் கரச னூரின் வியத்தகு நகரிற் புக்கான்.

     (இ - ள்.) பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் -
மங்கையர்க்கரசியாகிய பிராட்டியாரின் அரண்மனை வாயிலுள்ள பெரிய
தகுதியையுடைய மந்திரிகளும், ஏனை மண்ணினுக்கு அரசர் - ஏனைய
நாடுகட்கு அரசரானவர்களும், சேனை மன்னவர் - சேனைத் தலைவர்களும்,
பிறரும் ஈண்டி - மற்றையோரும் (மதில் வாயிலின்) நெருங்கி, கண்ணினுக்கு
இனியான் தன்னை - கட்புலனுக்கினிய கோலங் கொண்டுள்ள இறைவனை,
கண்டு - தரிசித்து, எதிர்கொண்டு தாழ - எதிர்கொண்டு வணங்க
(அவர்களோடும்), விண்ணினுக்கு அரசன் ஊரின் - வானுலகிற்கு அரசனாகிய
இந்திரனது நகரத்தினும், வியத்தகும் - வியக்கத்தக்க, நகரில் புக்கான் -
நகரத்தினுள் புகுந்தருளினான் எ - று.

     எண்ணும்மைகள் விரிக்க. ஊரின். இன் : உறழ்; பொருவு. வியக்கத்தகு
என்பது வியத்தகு என்றாயிற்று. (115)