I


416திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அங்கடி மதுரை யென்னோ
     வாற்றிய தவந்தா னென்பார்
இங்கிவர் வதுவை காண்பா
     னென்னநா நோற்றோ மென்பார்.

     (இ - ள்.) நங்கை நம்பியைத் திளைத்தற்கு என் றோற்றாள் என்பார்
- (நம்) பிராட்டி இந்த நம்பியைக் கூடித் திளைப்பதற்கு என்ன தவஞ்
செய்தாளோ என்று (சிலர்) சொல்லுவார்; வள்ளலும் மங்கையை மணப்பான்
என் நோற்றான் என்பார் - இந்த வள்ளலும் (நம்) நங்கையைக் கூட என்ன
தவஞ் செய்தானோ என்று (சிலர்) சொல்லுவார்; அம் கடி மதுரை ஆற்றிய
தவம் தான் என் என்பார் - அழகிய விளக்கமமைந்த இம்மதுரைப்
பதியானது செய்த தவந்தான் யாதோ என்று (சிலர்) சொல்லுவார்; இங்கு
இவர் வதுவை காண்பான் நாம் என்ன நோற்றோம் என்பார் - இங்கு
இவர்களின் திருமணத்தைக் காணுதற்கு நாம் என்ன தவஞ் செய்தோமோ
என்று (சிலர்) சொல்லுவார் எ - று.

     நங்கை - மகளிரிற் சிறந்தாள்; பெருமாட்டி. நம்பி - ஆடவரிற்
சிறந்தான் : பெருமான். ஓகாரங்கள் வியப்பின் கண் வந்தன. கொள், தான் :
அசை. திளைத்தற்கு, மணப்பான், காண்பான் என்பன வினையெச்சங்கள்.
என்ன - எத்தன்மையவான தவங்கள். இராமாயணத்திலுள்ள,

"நம்பியைக் காண நங்கைக் காயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணுந் தோறுங் குரிசிற்கு மன்ன தேயாம்
தம்பியைக் காண்மி னென்பார் தவமுடைத் துலக மென்பார்
இம்பரிந் நகரிற் றந்த முனிவனை யிறைஞ்சு மென்பார்,"

என்பது முதலிய செய்யுட்களின் கருத்து நயங்கள் இங்கே ஒத்து நோக்கற்
பாலன. (120)

தென்னவன் வருந்தி மேனாட் செய்தவப் பேறாப் பெற்ற*
தன்மகள் வதுவை காணத் தவஞ்செய்தா னிலனே யென்பார்
கன்னிதன் னழகுக் கேற்ற வழகனிக் காளை யென்பார்
மன்னவ னிவனே யன்றி வேறிலை மதுரைக் கென்பார்.

     (இ - ள்.) தென்னவன் - மலயத்துவச பாண்டியன், வருந்தி மேல்
நாள் செய் - வருத்தமுற்று முன்னாளிற் செய்த, தவப்பேறாப் பெற்ற -
தவப்பயனாகப் பெற்ற, தன்மகள் வதுவை காண - தன் புதல்வியாரின்
திருமணத்தைக் காணுதற்கு, தவம் செய்தானிலனே என்பார் -
தவஞ்செய்திலனே என்று (சிலர்) சொல்லுவார் : கன்னி தன் அழகுக்கு ஏற்ற
அழகன் இக்காளை என்பார் - பிராட்டியாரின் அழகுக்குப் பொருந்திய
பேரழகுடையவன் இத்தோன்றல் என்று (சிலர்) சொல்லுவார்; மதுரைக்கு
மன்னவன் இவனே அன்றி வேறு இலை என்பார் - மதுரைமா நகருக்கு
மன்னன் இப்பேரழகனே யல்லாமல் மற்றி யாரும் இல்லை என்று (சிலர்)
சொல்லுவார் எ - று. (121)


     (பா - ம்.) * தவப்பேறாற் பெற்ற.