நங்கைதன் னலனுக் கேற்ப நம்பியைத் தந்த திந்தத்
துங்கமா மதிநூல் வல்ல சுமதிதன் சூழ்ச்சி யென்பார்
அங்கவ டவப்பே றென்பா ரன்னைதன் கன்னிக் கன்றி
இங்கிவன் மருக னாக வெத்தவ முடைய ளென்பார். |
(இ
- ள்.) நங்கைதன் நலனுக்கு ஏற்ப - மகளிருட் சிறந்த (நம்)
பிராட்டியாரின் அழகுக்குப் பொருந்த, நம்பியைத் தந்தது - ஆடவருட்
சிறந்த இந் நம்பியைக் கொணர்ந்தது, இந்தத் துங்கம் மா மதி நூல் வல்ல
சுமதி தன் சூழ்ச்சியென்பார் - இந்த உயர்ந்த பெருமை பொருந்திய அறிவு
நூலில் வல்ல சுமதியினுடைய சூழ்ச்சித் திறன் என்று (சிலர்) சொல்லுவார்;
அங்கு அவள் தவப்பேறு என்பார் - அங்கு அப் பிராட்டியின் தவப்பயன்
என்று (சிலர்) சொல்லுவார்; அன்னை தன் கன்னிக்கு அன்றி - தாயாகிய
காஞ்சனமாலை பிராட்டியாரை மகளாகப் பெறுதற்குச் செய்த தவமல்லாமல்,
இங்கு இவன் மருகன் ஆக எத் தவம் உடையாள் என்பாள் - இங்கு இந்
நம்பியை மருகனாகப் பெறுதற்கு என்ன தவத்தை உடையாளோ என்று
(சிலர்) சொல்லுவார் எ - று.
மதியையுடைய
நூல்வல்ல சுமதி யென்னலுமாம்;
"மதி நுட்ப நூலோ
டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை" |
என்னுந் திருக்குறளுங்
காண்க. கன்னிக்கு - கன்னியைப் பெறுதற்
பொருட்டு. (122)
பூந்துகி னெகிழ்ப்பர் சூழ்வர் புணர்முலை யலைப்பர் பூசு
சாந்தினை யுகுப்பர் நாணந் தலைக்கொண்டார் போலச் சாய்வர்
கூந்தலை யவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர் மேனி
மாந்தளி ரெங்கு மாரன் வாளிகள் புதையச் சோர்வார். |
(இ
- ள்.) பூந்துகில் நெகிழ்ப்பர், சூழ்வர் - அழகிய ஆடையை
நெகிழச் செய்து பின் உடுப்பர்; புணர் முலை அலைப்பர் - நெருங்கிய
கொங்கைகளை வருத்துவார்; பூசுசாந்தினை உகுப்பர் - பூசிய சந்தனத்தை
உதிர்ப்பார்; நாணம் தலைக்கொண்டார் போலச் சாய்வர் - நாண
மீக்கொண்டவரைப் போலத் தலைகுனிவர்; கூந்தலை யவிழ்ப்பர் வாரிக்
கூட்டுவர் முடிப்பர் - முடித்த கூந்தலை அவிழ்த்து வாரிச் சேர்த்துப்
பின்னும் முடிப்பர்; மேனி மாந்தளிர் எங்கும் - உடலாகிய மாந்தளிர்
முழுதும், மாரன் வாளிகள் புதையச் சோர்வார் - மன்மதனுடைய பாணங்கள்
தைக்க ஆவி சோர்வார் எ - று. துகில் நெகிழ்த்தல் முதலியன வேட்கை
நோயால் நிகழும் மெய்ப்பாடுகள்;
"கூழை
விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ
டூழி நான்கே யிரண்டென மொழிப" |
என்னும் தொல்காப்பிய
மெய்ப்பாட்டியற் சூத்திரம் நோக்குக. (123)
|