தண்ணளி யொழுக்கஞ்
சார்ந்த குணத்தினைச் சார்ந்து மிந்த
வண்ணமென் மலர்க ளென்னே வாளியாய்த் தைத்த வென்பார்
கண்ணறுங் கூந்தல் வேய்ந்த கடியவிழ் நீலத் தாரும்
வெண்ணகை யரும்பு முலைத் தாமமும் வெறுத்து வீழ்ப்பார். |
(இ
- ள்.) தண் அளி ஒழுக்கம் சார்ந்த - தண்ணிய அருள்
ஒழுக்கத்தைப் பொருந்திய, குணத்தினைச் சார்ந்தும் - குணத்தினை அடுத்தும்
(தண்ணிய வண்டுகளின் வரிசையாகிய வில்லின் நாணினை அடுத்தும்), இந்த
வண்ணம் மெல் மலர்கள் வாளியாய்த் தைத்த என்னே என்பார் - இந்த நிறம்
வாய்ந்த மெல்லிய மலர்கள் கணைகளாய்த் தைத்தன இஃது என்ன அதிசய
மென்பார்: கள் நறும் கூந்தல் வேய்ந்த - தேன் மணங் கமழும் கூந்தலி
லணிந்த, கடி அவிழ் நீலத்தாரும் - மணத்தொடு மலர்ந்த நீலமலர்
மாலையையும், வெள் நகை அரும்பு முல்லைத் தாமமும் - தம் வெள்ளிய
பற்கள் போல அரும்பிய முல்லை மாலையையும், வெறுத்து வீழ்ப்பார் -
வெறுத்து நீக்குவார்கள் எ - று.
அளி
- அருள், வண்டு. ஒழுக்கம் - நடை, வரிசை. குணம் - பண்பு,
வில்லின் நாண். அருளொழுக்கத்தோடு கூடிய நற்குணமுடையார்
எப்பொழுதும் யார்க்கும் எத்துணையும் இன்னா செய்யா ரென்ப; இம் மலர்கள் 'தண்ணளி
யொழுக்கஞ் சார்ந்த குணத்தினைச் சார்ந்து' வைத்தும் இன்னாமை
செய்யும் விரோத மிருந்த வாறென்னேயென்று சிலேடைப் பொருள் கொண்டு
கூறினாரென்க. முல்லை மயக்கத்தையும், நீலம் சாக்காட்டையும் விளைக்கும்
காமனம்புகளாதலின் அவற்றை வெறுத்து வீழ்த்தன ரென்க. (124)
விம்மிச்செம் மாந்த கொங்கை மின்னனார் சிலர்விற் காமன்
கைம்மிக்க கணையே றுண்டு கலங்கிய மயக்காற் றங்கள்
மைம்மிக்க நெடுங்கண் மூரல் வதனமு மவனம் பென்றே
தம்மிற்றம் முகத்தை நோக்கார் தலையிறக் கிட்டுச் செல்வார். |
(இ
- ள்.) விம்மி செம்மாந்த கொங்கை மின் அனார் சிலர் - பருத்து
இறுமாந்த கொங்கைகளையுடைய மின்னை ஒத்த மகளிர் சிலர், வில்காமன்
கை மிக்க கணை ஏறுண்டு கலங்கிய மயக்கால் - வில்லையுடைய மதவேளின்
வலிமிக்க கணைகள் தைத்துக் கலங்கிய மயக்கத்தால், தங்கள் மை மிக்க
நெடுங் கண் - தங்களுடைய மை மிகுந்த நீண்ட கண்களும், மூரல் வதனமும்
- பற்களும் முகங்களும், அவன் அம்பு என்று - அவ்வேளின்
கணைகளென்று கருதி, தம்மில் தம் முகத்தை நோக்கார் - ஒருவருக்கொருவர் முகத்தை நோக்காதவராகி,
தலை இறக்கிட்டுச் செல்வார் - தலையை இறங்கச்
செய்து செல்வார்கள் எ - று.
கைம்மிக்க
கணை - கையிகந்த துன்ப மிழைக்குங் கணை. கண்ணை
நீலமென்றும், மூரலை முல்லையென்றும், முகத்தைத் தாமரையென்றும்
கருதினர். இறக்கியென்பது இடு என்னும் துணை வினை பெற்று விகாரமாய்
இறக்கிட்டு என்றாயது. கண் முதலியவற்றைக் காமனம்புகளாகிய மலர்களென
மயங்கினமையால் இது மயக்கவணி. (125)
|