I


திருமணப் படலம்419



பற்றிய பைம்பொன் மேனிப் பசப்பது தேறா ரண்ணல்
ஒற்றைமால் விடையின் மேற்கொண் டிருந்துநம் முளத்து மேவப்
பெற்றன மிதென்கொன் மாயம் பேதைமீர் பெருமா னீண்ட
கற்றைவார் சடைப்பூங் கொன்றை யிதுவன்றோ காண்மி னென்பார்.

     (இ - ள்.) பைம்பொன் மேனி பற்றிய பசப்பது தேறார் - பசிய பொன்
போல மேனியிற் பற்றிய பசப்பு நிறத்தை அறியாதவராய், அண்ணல் -
இறைவன், ஒற்றைமால் விடையின் மேற்கொண்டு இருந்தும் - ஒப்பற்ற பெரிய
இடபத்தின் மேல் எழுந்தருளியிருந்தும், நம் உளத்தும் மேவப் பெற்றனம் -
நமது உள்ளத்தினும் வந்து பொருந்தப் பெற்றோம்; இது என் மாயம் - இஃது
என்ன மாயம்; பேதைமீர் - பெண்காள்; பெருமான் - அச் சிவபெருமானது,
நீண்ட கற்றைவார் சடைப்பூங் கொன்றை - திரட்சியான நீண்ட சடையிலுள்ள
கொன்றை மலர், இது அன்றோ - நம்முடம் பிற்றோன்றும் இஃதன்றோ,
காண்மின் என்பார் - பாருங்களென்று (பசப்பினைக் குறித்துக் காட்டிச்)
சொல்லுவார்கள் எ - று.

     நம் கண்ணெதிரே புறத்திலுள்ளவன் அகத்தினும் மேவப் பெற்றதொரு
விசித்திரம் இருந்தவாறென்னேயென்பார். அவன் நம் அகத்தினும்
மேவியுளனென்பதற்கு அடையாளம் என்னை யென்பார்க்கு உடம்பின்
பசப்பினைக் காட்டி இஃதவன் கொன்றைமாலை யென்பாரென்க. பசப்பு -
வேட்கை நோயுற்றார்க்கு மெய்யிலுளதாகும் நிற வேறுபாடு; அது
பொன்னினையும் கொன்றைப் பூவையும் நிறத்தாலொப்பது. மேனி பற்றிய
வென்க. பசப்பது, அது: பகுதிப் பொருள் விகுதி. தேறார் கொன்றை
யிதுவன்றோ என்பார் எனக் கூட்டுக; தேறார் : முற்றெச்சம். இதென் :
விகாரம். கொல் : அசை. (126)

திங்களென் றெழுந்து நம்மைச் சுடுவதென்*செந்தீ யென்பார்
புங்கவன் சென்னி மீதுங் கிடப்பதே போலு மென்பார்
அங்கவற் கிந்த வெப்ப மிலைகொலென் றயிர்ப்பா ராற்றக்
கங்கைநீர் சுமந்தா னென்பா ரதனையுங் காண்மி னென்பார்.

     (இ - ள்.) செந்தீ - செந் நெருப்பானது, திங்கள் என்று எழுந்து
நம்மைச் சுடுவது என் என்பார் - சந்திரன் என்ற பெயரோடு தோன்றி
நம்மைச் சுடுவது என்ன காரணமென்பார் (சிலர்); புங்கவன் சென்னி மீதும்
கிடப்பதே போலும் என்பார் - இவ்விறைவனது முடியின் கண்ணும் (இது)
கிடக்கின்றதே என்பார் (சிலர்); அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று
அயிர்ப்பார் - அவனுக்கு இந்த வெம்மை இல்லையோ வென ஐயுறுவார்
(சிலர்); ஆற்றக் கங்கை நீர் சுமந்தான் என்பார் - அவ் வெப்பத்தை
ஆற்றுதற்கே கங்கை நீரை முடியிற் றாங்கினான் என்பார் (சிலர்); அதனையும்
காண்மின் என்பார் - அதனையும் பாருங்கள் என்பார் (சிலர்) எ - று.

    திங்கள் முதலிய தண்ணிய பொருளெல்லாம் விரக நோயுற்றார்க்கு
அந் நோயை மிகுவித்து வெம்மையவாய்த் தோன்றுமென்க. போலும் : ஒப்பில்
போலி. அங்கு : அசை. கொல் : ஐயப்பொருட்டு. ஆற்ற - மிகவு மென்றுமாம். (127)


     (பா - ம்.) * சுடுவதே.