கலையொடு
நாணம் போக்கிக் கருத்தொடு வண்ணம் வேறாய்
உலையொடு மெழுகிட் டென்ன வுருகுகண் ணீர ராகிக்
கொலையொடு பயில்வேற் கண்ணார் குரிசிறன் பவனி நோக்கி
அலையொடு மதியஞ் சூடு மையன்மெய் யன்ப ரொத்தார். |
(இ
- ள்.) கொலையொடு பயில்வேல் கண்ணார் - கொலையிற் பழகும்
வேல் போன்ற கண்களையுடைய மகளிர், குரிசில் தன் பவனி நோக்கி -
இறைவன் திருவுலாவைக் கண்டு, கலையொடு நாணம் போக்கி - ஆடையோடு நாணினையும் போக
விடுத்து, கருத்தொடு வண்ணம் வேறாய் - உள்ளத்தோடு
நிறமும் வேறுபட்டு, உலையொடு மெழுகு இட்டென்ன - உலையில் மெழுகை
இட்டாற்போல, உருகு கண்ணீரராகி - உள்ளம் உருகுதலால் ஒழுகுங்
கண்ணீரையுடையராகி, அலையொடு மதியம் சூடும் ஐயன் மெய் அன்பர்
ஒத்தார் - கங்கையோடு சந்திரனையுமணிந்த இறைவனுடைய உண்மை
யன்பர்களை ஒத்தார்கள் எ - று.
கலை
- மேகலையுமாம். கலையொடு, கருத்தொடு, அலையொடு
என்பவற்றில் ஒடு எண்ணுதற் பொருளில் வந்தன. உலையொடு, கொலையொடு
வேற்றுமை மயக்கம். இட்டென்ன - இட்டாலென்ன.அலை : ஆகுபெயர்.
மதியம், அம் : சாரியை. இறைவனிடத்து மெய்யன்புடையார் 'கற்பனவும்
இனியமையும்' என்று நூலறிவைப் போக விடுத்தும், 'நாணது வொழிந்து
நாடவர் பழித்துரை பூணதுவாகக் கொண்டும், 'தந்த துன் றன்னைக்
கொண்டதென்றன்னை' என்றபடி பசுகரணமெல்லாம் சிவகாணமாக
மாறப்பெற்றும், 'அழல் சேர்ந்த மெழுகே யன்னா' ராய்க் 'கண்ணீர் ததும்பி'
நிற்பராகலின் 'அன்பரொத்தார்' என்றார். கலை - நிவிர்த்தி முதலிய
ஐங்கலையுமாம். (128)
நட்டவர்க் கிடுக்க ணெய்த நன்றிகொன் றவர்போற் கையில்
வட்டவாய்த் தொடியுஞ் சங்கு மருங்குசூழ் கலையு நீங்க
இட்டபொற் சிலம்பிட் டாங்கே நன்றியி னிகவார் போற்கால்
ஒட்டியே கிடப்ப நின்றா ருகுத்தபூங் கொம்ப ரன்னார். |
(இ
- ள்.) நட்டவர்க்கு - நண்பினருக்கு, இடுக்கண் எய்த - வறுமை
வர, நன்றி கொன்றவர்போல் - அவரை விட்டு நீங்கும் நன்றி
கொன்றவர்போல, கையில் வட்டவாய்த் தொடியும் - கையிலணிந்த
வட்டமாகிய வாயினையுடைய தொடியும், சங்கும் - வளைகளும், மருங்கு சூழ்
கலையும் நீங்க - இடையைச் சூழ்ந்த மேகலையும் நீங்கவும், நன்றியின்
இகவார்போல் - நன்றியினின்று நீங்காதவர் போல, இட்ட பொன் சிலம்பு
இட்டாங்கே - அணிந்த பொற் சிலம்பு அணிந்தபடியே, கால் ஒட்டியே
கிடப்ப - காலில் ஒட்டிக் கிடக்கவும், உகுத்தபூங் கொம்பர் அன்னார்
நின்றார் - உதிர்த்த பூக்களையுடைய கொம்பு போன்றவராய் (அம் மகளிர்)
நின்றார்கள் எ - று.
நீங்க,
ஒட்டியே கிடப்ப என்னும் பொருள்களின் றொழிலை
உவமைகட்கும் ஏற்றுக. நன்றி கொன்றவரென்றமையால் முன் நன்றி
பெற்றவரென்க. நீங்க உகுத்த பூங்கொம்ப ரன்னாராய் நின்றார் என
வியையும்.
"பூவுதிர் கொம்பென
மகளிர் போயினார்" |
என்று கம்பர்
கூறுவது இங்கு ஒத்து நோக்கற்பாலது. இட்டாங்கே : அகரநீ
தொகுத்தல். (129)
|