மின்னாகு வேற்க ணாளோர் விளங்கிழை விடைமே லையன்
புன்னகைப் போது நோக்கப் போதுமு புரமும் வேனின்
மன்னவன் புரமுஞ் சுட்ட வல்லவோ கெட்டேன் வாளா
இன்னவை சுடாது போமோ வேழையேன்* புரமு மென்றாள். |
(இ
- ள்.) மின் நகு வேல் கண்ணாள் ஓர் விளங்கு இழை - மின் போல் விளங்கும்
வேல் போன்ற கண்களையுடைய ஓர் விளங்கிய
அணிகளையுடையாள், விடைமேல் ஐயன் - இடபத்தின்மேல் அமர்ந்தருளும்
இவ்வையனுடைய, புன்னகைப் போதும் - புன்னகையாகிய மலரும், நோக்கப்
போதும் - நோக்கமாகிய மலரும் (முறையே), முப்புரமும் வேனில் மன்னவன்
புரமும் சுட்ட அல்லவோ - மூன்று புரங்களையும் வேனிற் காலத்திற்குரிய
மதவேளின் உடலையும் சுட்டன அல்லவா, கெட்டேன் - ஆ கெட்டேனே,
இன்னவை - இவைகள், ஏழையேன் புரமும் சுடாது வாளா போமோ என்றாள்
- எளியேனது உடலாகிய புரத்தையும் சுடாமல் வீண்போமோ எ-று.
மின்னலைச்
சிரிக்கு மெனலுமாம். புரம் - ஊர், உடம்பு. கெட்டேன் :
வியப்புப் பொருளில் வந்த இடைச் சொல். ஓகாரங்கள் எதிர்மறை. (130)
உழைவிழி யொருத்தி தன்க ணுருவெளி யாகித் தோன்றுங்
குழகனை யிரண்டு செம்பொற் கொங்கையு மொன்றாய் வீங்கத்
தழுவுவா ளுற்றங் காணா டடமுலை யிரண்டே யாகி
இழையிடை கிடக்க நீங்கி யிருக்கைகண் டிடைபோலெய்த்தாள். |
(இ
- ள்.) உழைவிழி ஒருத்தி - மான் போன்ற பார்வையையுடைய
ஒரு பெண் தன் கண் - தன் கண்களுக்கு, உருவெளியாகித் தோன்றும்
குழகனை - உருவெளியாகிக் காணப்படும் மணவாளக் கோலமுடைய
இறைவனை. செம்பொன் கொங்கை இரண்டும் ஒன்றாய் வீங்கத் தழுவுவாள்
- செம்பொன்னி னிறம் வாய்ந்த இரண்டு கொங்கைகளும் விம்மி ஒன்றாகுமாறு தழுவுகின்றவள்,
ஊற்றம் காணாள் - பரிசங் காணாதவளாய், இழை இடை
கிடக்க தடமுலை நீங்கி - நூலிழை இடையே தங்குமாறு பெரிய முலைகள்
பிரிந்து, இரண்டேயாகி இருக்கை கண்டு - இரண்டாகியிருத்தலைக் கண்டு,
இடைபோல் எய்த்தாள் - தனது இடை மெலிந்திருப்பது போல் மெலிந்தாள்
எ - று.
உருவெளி
- வெளியிற்றோன்றும் பொய்யுருத்தோற்றம்;
ஒன்றையிடையறாது சிந்திப்பார்க்கு அது முன்னிற்பது போல்
தோற்றமுண்டாத லியல்பு. அஃதவன் கண்ணின் குற்றமன்றென்பார்
'உழைவிழி பொருத்தி' என அடையடுத்தார். ஊற்றம் - ஊறு; அம் : பகுதிப்
பொருள் விகுதி. இழையிடைகிடக்க வென்றமையால் முன் கிடவாமை
பெற்றாம். இருக்கை : தொழிற்பெயர். (131)
(பா
- ம்.) * ஏழையேம்.
|