I


திருமணப் படலம்427



தாக்கச் சிந்திய - திருநந்திதேவர் கையிலுள்ள பிரம்பு தாக்குதலால் சிதறிய,
அண்டவாணர் முடிகளின் மணியும் - தேவர்கள் முடிகளிலுள்ள
மாணிக்கங்களும், தாரும் - கற்பகப் பூமாலைகளும் (ஆகிய இவைகள்), வீதி
குப்பையாய் மொய்த்த - வீதியின்கண் குப்பையாய் மிக்கன எ - று.

     கொடிகளினின்றும் உதிர்ந்தவென்க. உதிர்ந்தவென்பதற்கேற்பக் கலை
முதலியவற்றுக்குச் சிந்தியவென்பது வருவிக்கப்பட்டது. அண்டம் - வானுலகம்.
வாணர், வாழ்நர் என்பதன் மரூஉ. மொய்த்த : அன்பெறாதமுற்று: ஏழனுருபு
இறுதிக்கண் தொக்கது;

"ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகா விறுதி யான"

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனா ராகலின். (141)

துன்னிய தருப்பை கூட வரசிலை துழாவித் தோய்த்துப்
பொன்னியல் கலச நன்னீர் பூசுரர் வீச வன்னார்
பன்னியர் வட்ட மாக வானவிற் பதித்தா லென்ன
மின்னிய மணிசெய் நீரா சனக்கலம்* விதியாற் சுற்ற.

     (இ - ள்.) பூசுரர் - அந்தணர்கள், பொன் இயல் கலச நல் நீர் -
பொன்னாலமைந்த கலசத்திலுள்ள நல்ல நீரில், துன்னிய தருப்பை கூட -
நெருங்கிய தருப்பை பொருந்தியிருக்க (அதில்), அரசிலை துழாவித் தோய்த்து
வீச - அரசிலையாற் றுழாவித் தோய்த்து அந் நீரை வீசவும், அன்னார்
பன்னியர் - அவர்களுடைய மனைவிமார்கள், வானவில் வட்டமாகப்
பதித்தால் என்ன - இந்திர வில்லை வட்டமாக வைத்தாற் போல, மின்னிய
மணி செய் நீராசனக் கலம் - விளங்கிய மணிகளை வட்டமாக வைத்துச்
செய்த நீராஞ்சனத் தட்டினை ஏந்தி, விதியால் சுற்ற - முறைப்படி சுழற்றவும்
எ - று.

     பூசுரர் - புவித்தேவர்; கலைவாணரைத் தேவரென்றல் : வழக்கு. பன்னி:
பத்நி யென்பதன் றிரிபு. நீராசனம் - ஆலத்தி. (142)

கொடிமுர சாடி செம்பொற் குடமணி நெய்யிற் பூத்த
கடிமல ரனைய தீப மங்குசங் கவரி யென்னும்
படிவமங் கலங்க ளெட்டும் பரித்துநேர் பதுமக் கொம்பர்
வடிவினார் வந்து காட்ட மாளிகை மருங்கிற் செல்வான்

     (இ - ள்.) பதுமக் கொம்பர் நேர் வடிவினார் - தாமரை மலரையுடைய
பூங்கொம்பையொத்த வடிவத்தையுடைய மகளிர், கொடி - கொடியும், முரசு -
பேரிகையும், ஆடி - கண்ணாடியும், செம்பொன் குடம் - சிவந்த
பொன்னாலாகிய குடமும், மணி - மணியும், நெய்யில் பூத்த கடிமலர் அனைய
தீபம் - நெய்யிலேற்றிய மணம் பொருந்திய மலர் போன்ற விளக்கும்,
அங்குசம் - தோட்டியும், கவரி - சாமரையும், என்னும் படிவும் - என்று
சொல்லப்படும் இவைகளின் வடிவத்தையுடைய, மங்கலங்கள் எட்டும்-


     (பா - ம்.) * நீராஞ்சனக் கலம்.