மதத்தோடு கலந்த
சந்தனக் குழம்பை அப்பி, தாது அவிழ் புது மந்தாரப்
பொன் மலர் சாத்தி - மகரந்தத்தோடு விரிந்த புதிய மந்தாரத்தின்
பொன்னிறம் வாய்ந்த மலர்களைச் சூட்டி, வேறு நின்று - ஒரு சிறை ஒதுங்கி
நின்று, சென்னி மீது இரு கரங்கள் கூப்பி - முடியின் மேல் இரண்டு
கைகளையும் குவித்து, இதனைச் சொன்னாள் - இதனைக் கூறுகின்றாள் எ-று.
நீவதல்
- துடைத்தல். இரு கரங்களும் என்னும் உம்மை தொக்கது.
வேறு நின்று - ஒதுங்கி நின்று. இதுவென்றது மேல் வருவதனை. (149)
அருமையா லடியேன் பெற்ற வணங்கினை வதுவை செய்தித்
திருநகர்த் திருவுங் கன்னித் தேயமுங் கைக்கொண் டாள்கென்
றுரை செய்தா ளதற்கு நேர்வா ருண்ணகை யுடைய ராகி
மருகனா ரியங்க ளார்ப்ப வதுவைமண் டபத்தைச் சார்ந்தார். |
(இ
- ள்.) அருமையால் அடியேன் பெற்ற அணங்கினை - அரிய
தவத்தால் அடியாளாகிய யான் பெற்ற தெய்வக் கன்னியை, வதுவை செய்து,
திருமணம் செய்து, இ திருநகர்த் திருவும் கன்னித் தேயமும் - இந்த அழகிய
நகரின் செல்ளத்தையும் கன்னி நாட்டையும், கைக் கொண்டு ஆள்க என்று
உரை செய்தாள் - பெற்று ஆள்வீராக என்று கூறி வேண்டினாள்; அதற்கு
நேர்வார் மருகனார் - அதற்கு உடன்படுவாராகிய மருமகனார், உள் நகை
உடையாரகி - புன்னகை உடையவராகி, இயங்கள் ஆர்ப்ப வதுவை
மண்டபத்தைச் சார்ந்தார் - இயங்கள் ஒலிக்கத் திருமண மண்டபத்தை
அடைந்தார் எ - று.
ஆள்கென்று
அகரந் தொக்கது. நேர்வாராகிய மருமகனாரென்க.
மருமகனார் நேர்வாராய் எனவுரைத்தலுமாம். நேர்தற் குறிப்பைப்
புலப்படுத்தினாரென்பார் 'உண்ணகை யுடையராகி' என்றார். (150)
அருத்தநான் மறைக ளார்ப்ப வரிமணித் தவிசி லேறி
நிருத்தனாங் கிருந்து சூழ நின்றமா லயனை யேனை
உருத்திரா தியரைப் பின்னு மொழிந்தவா னவரைத் தத்தந்
திருத்தகு தவிசின் மேவத் திருக்கடை நாட்டம் வைத்தான். |
(இ
- ள்.) நிருத்தன் - இறைவன், அருத்தம் நால் மறைகள் ஆர்ப்ப -
பொருளமைந்த நான்கு மறைகளும் ஒலிக்க, மணி அரித்தவிசில் ஏறி ஆங்கு
இருந்து - இரத்தின சிங்காதனத்திலேறி வீற்றிருந்து, சூழ நின்ற - சுற்றிலும்
நின்ற, மால் அயனை - திருமாலையும் பிரமனையும், ஏனை உருத்திர
ஆதியரை - மற்றை உருத்திரர் முதலானவரையும், பின்னும் ஒழிந்த
வானவரை - மற்றும் எஞ்சிய தேவரையும், தத்தம் திருத்தகு தவிசில் மேவத்
திருக்கடை நாட்டம் வைத்தான் - அவரவர்க்கமைந்த அழகு பொருந்திய
ஆதனங்களில் இருக்குமாறு திருக்கடைக்கண் செய்தருளினான் எ - று.
ஆங்கு
: அசை. சிறப்பு நோக்கி 'உருத்திராதியரை' யென்றும்,
'ஒழிந்த வானவரை' யென்றும் பிரித்தோதினார். கடைநாட்டம் வைத்தல் -
கடைக்கணித்தல். (151)
|