I


திருமணப் படலம்433



மாசறுத் தெமையா னந்த வாரிநீ ராட்டிப் பண்டைத்
தேசுரு விளக்க வல்ல சிவபரம் பரையைச் செம்பொன்
ஆசனத் திருத்தி நான மணிந்துகுங் குமச்சே றப்பி
வாசநீ ராட்டி னார்கண் மதிமுகக் கொம்ப ரன்னார்.

     (இ - ள்.) மாசு அறுத்து எம்மை ஆனந்த வாரி நீர் ஆட்டி -
பாசமாகிய குற்றத்தைப் போக்கி எம்மைப் பேரின்ப வெள்ள நீரில்
மூழ்குவித்து, பண்டைத் தேசு உரு விளக்கவல்ல சிவ பரம்பரையை -
அனாதியேயுள்ள ஒளியுருவை விளக்கவல்ல சிவசத்தியாகிய பிராட்டியாரை,
மதிமுகக் கொம்பர் அன்னார் - சந்திரன்போலு முகத்தையுடைய பூங்கொம்பு
போன்ற மகளிர் செம்பொன் ஆசனத்து இருத்தி - சிவந்த
பொற்றவிசிலிருக்கச் செய்து, நானம் அணிந்து குங்குமச் சேறு அப்பி -
கத்தூரி திமிர்ந்து குங்குமச் சேற்றைப் பூசி, வாசநீர் ஆடினார்கள் -
மணமூட்டிய நீரால் திருமஞ்சனஞ் செய்வித்தார்கள் எ - று.

     ஆனந்த வாரிநீர் என்பதனை,

"வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையா னாறு"

எனத் திருவாசகம் திருத்தசாங்கத்துட் கூறுதலானுமறிக. ஆன்மாவானது
சொரூபத்தில் கறையற்றதாகலின்
"பண்டைத்தேசுரு" என்றார்; தேசு - ஒளி;
சிவத்துவமென்னலுமாம்;

"சிவனுளத்தே தோன்றித் தீயிரும்பைச் செய்வதுபோற்
சீவன் றன்னைப்
பந்தனையை யறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்
பரப்பையெலாங் கொடுபுகுந்து பதிப்பனிவன் பாலே"

எனச சிவஞானசித்தி கூறுவது காண்க. இறைவன் தன் அருட் சத்தியால்
ஆன்மாக்களின் பாசத்தையகற்றிச் சொரூபத்தை விளக்குதல் கூறினார். (154)

முரசொடு சங்க மேங்க மூழ்கிநுண் டூசு சாத்தி
அரசிய லறத்திற் கேற்ப வந்தணர்க் குரிய தானம்
விரைசெறி தளிர்க்கை யார வேண்டுவ வெறுப்பத் தந்து
திரைசெய்நீ ரமுத மன்னா டிருமணக் கோலங் கொள்வாள்.

     (இ - ள்.) முரசொடு சங்கம் ஏங்க - பேரிகையும் சங்கமும் ஒலிக்க,
மூழ்கி - நீராடி, நுண் தூசு சாத்தி - மெல்லிய ஆடை உடுத்து, அரசியல்
அறத்திற்கு ஏற்ப - அரச தருமத்துக்குப் பொருந்த, அந்தணர்க்கு உரிய
தானம் - அந்தணர்க்குப் பொருந்திய தானங்களாக, வேண்டுவ வெறுப்ப.
அவர்கள் வேண்டும் பொருள்களை வெறுக்குமாறு, விரை செறி தளிர்க்கை
ஆரத் தந்து - மணமிக்க தளிர் போன்ற கையால் நிறையக் கொடுத்து,
திரைசெய் நீர் அமுதம் போன்ற பிராட்டியார், திருமணக் கோலம்
கொள்வாள் - திருமணக் கோலம் செய்து கொள்ளத் தொடங்கினார் எ - று.