கொடிக்கய லினமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு
தொடிக்கலை மதியுந் தங்கோன் றொல்குல விளக்காய்த் தோன்றும்
பிடிக்கிரு காதி னூடு மந்தணம் பேசு மாபோல்
வடிக்குழை மகரத் தோடு பரிதிவாண் மழுங்கச் சேர்த்து. |
(இ
- ள்.) கொடி கயல் இனமாய் நின்ற கோள் சுறா ஏறும் -
கொடியில் எழுதிய கயலுக்குச் சுற்றமாக நின்ற வலிய மகர வேறும், வீறு
கலைதொடி மதியும் - உயரும் கலைகளையுடைய வட்டமாகிய சந்திரனும்,
தம் கோன் தொல் குல விளக்காய்த் தோன்றும் பிடிக்குதம் தலைவனாகிய
மலயத்துவச பாண்டியனுக்குப் பழைய குல விளக்காய்த் தோன்றியருளிய
பெண் யானை போன்ற பிராட்டியாரின், இரு காதின் ஊடும் மந்தணம்
பேசுமா போல் - இரண்டு திருச்செவிகளினும் இரகசியம் பேசுந் தன்மை
போல. வடிக்குழை - வடித்த குழைகளை, மகரத்தோடு - மகர
குண்டலங்களோடு, பரிதிவாள் மழுங்கச் சேர்த்து - சூரியன் ஒளி
மழுங்குமாறு அணிந்து எ - று.
கோள்
- வலிமை. தொடி - வட்டம். தங்கோன் என்பதற்குச்
சுறவுக்கேற்பத் தம் தலைவன் என்றும், மதிக்கேற்பத் தம் வழியில் வந்த
தலைவன் என்றும் பொருள் கொள்க. பாண்டியர் குலம் 'படைப்புக் காலந்
தொடங்கி மேம்பட்டு வரு'வதாகலின் 'தொல் குலம்' என்றார்; பாண்டியர்க்குப்
பழையர் என்பது ஓர் பெயராதலும் நோக்குக. மந்தணம் - மறை; மந்தணம்
பேசுவார் பிறரறியாவாறு காதிற் பேசுவரென்க : "செவிச் சொல்லும்" என்றார்
வள்ளுவனாரும். மகரம் - மகர குண்டலம்; தோடு எனப் பிரித்தல்
பொருந்தாது. (162)
மழைக்குமா மதிக்கு நாப்பண் வாணவிற் கிடந்தா லொப்ப
இழைக்குமா மணிசூழ் பட்ட மிலம்பக மிலங்கப் பெய்து
தழைக்குமா முகிலை மைந்தன் றளையிடல் காட்டு மாபோற்
குழைக்குநீர்த் தகர ஞாழற் கோதைமேற் கோதை யார்த்து. |
(இ
- ள்.) மழைக்கும் மாமதிக்கும் நாப்பண் - முகிலுக்கும் நிறை
மதிக்கும் நடுவில், வானவில் கிடந்தால் ஒப்ப - இந்திரவில் கிடந்தாற்போல,
இழைக்கும் மாமணி சூழ் பட்டம் - அழுத்திய பெரிய மணிகள் சூழ்ந்த
பட்டமும், இலம்பகம் - நுதலணி மாலையும், இலங்கப் பெய்து - விளங்க
அணிந்து, தழைக்கும் மா முகிலை - செழித்த கரிய முகிலை, மைந்தன்
தளையிடல் காட்டுமா போல் - புதல்வனாகிய உக்கிர குமார பாண்டியன்
(பின்) தளையிடுதலைக் காட்டுதல் போல, நீர் குழைக்கும் தகர ஞாழல்
கோதைமேல் - பனி நீரில் குழைத்த மயிர்ச் சாந்தணிந்த கூந்தலின் மேல்,
கோதை ஆர்த்து - மாலையைச் சூட்டி எ - று.
இலம்பகம்
- நெற்றிச் சூட்டாகிய மாலை. காட்டுமாறு : ஈறு தொக்கது.
தகர ஞாழல் : தகரமும் ஞாழலும் கூடிய சாந்து என அன்மொழித் தொகை.
(163)
கற்பகங் கொடுத்த விந்தக் காமரு கலன்க ளெல்லாம்
பொற்பமெய்ப் படுத்து முக்கட் புனிதனுக் கீறி லாத
அற்புத மகிழ்ச்சி தோன்ற வழகுசெய் தமையந் தோன்றச்
சொற்கலை யாளும் பூவின் கிழத்தியுந் தொழுது நோக்கி. |
|