I


திருமணப் படலம்449



     (இ - ள்.) பின்பு பிறை முடிப் பெருமான் - பின்பு சந்திரனையணிந்த
முடியினையுடைய இறைவன், தன் பன்னியோடு - தன் தேவியாரோடும்,
கையில் நன்பொரி வாங்கி - திருக்கையில் நல்ல பொரியை வாங்கி, செந்தீ
நா மடுத்து - சிவந்த தீயின் நாவிற் பெய்து, எனைத்தும் ஆன தன் படிவு
உணர்ந்த - எல்லாமாகிய தனது திருவுருவத்தையுணர்ந்த, வேத முனிவர்க்கு
- வேதங்களையுணர்ந்த முனிவர்களுக்கு; தக்க தானம் - ஏற்ற தானங்களை,
அகம் இன்பு ததும்ப நல்கி - உள்ளத்தில் மகிழ்ச்சி மீக்கூரக் கொடுத்து,
முறையால் எரி வலம் வந்து - விதிப்படி தீயை வலமாக வந்து எ - று.

     நா மடுத்தல் - நாவில் அகப்படச் செய்தல். படிவம் என்பது ஈறு
தொக்கது. (187)

மங்கலம் புனைந்த செம்பொ னம்மிமேன் மணாட்டி பாத
பங்கய மலரைக் கையாற் பரிபுரஞ் சிலம்பப் பற்றிப்
புங்கவன் மனுவா லேற்றிப் புண்ணிய வசிட்டன் றேவி
எங்கெனச் செங்கை கூப்பி யெதிர்வர வருட்கண் சாத்தி.

     (இ - ள்.) புங்கவன் - இறைவன், மங்கலம் புனைந்த செம்பொன்
அம்மி மேல் - மங்கலமாக அலங்கரித்த செம்பொன்னாலாகிய அம்மியின்
மேல், மணாட்டி பாத பங்கய மலரை - தேவியாரது திருவடித் தாமரை
மலரை, பரிபுரம் சிலம்ப - சிலம்பு ஒலிக்க, கையால் பற்றி - திருக்கையால்
பிடித்து, மனுவால் ஏற்றி - மந்திரத்தோடு தூக்கி வைத்து, புண்ணிய
வசிட்டன் தேவி எங்கென - அற வடிவாகிய வசிட்டன் மனைவியாகிய
அருந்ததி எங்கே என்று கேட்க, செங்கை கூப்பி எதிர் வர - (அவ்வருந்ததி)
சிவந்த கைகளைக் கூப்பி எதிரே வர, அருள் கண் சாத்தி - (அவள் மீது)
அருட்பார்வையை வைத்து எ - று.

     மனுவால் - மந்திரத்தோடு. அம்மி மிதிப்பித்தலும் அருந்ததி
பார்த்தலும் கூறினார். (188)

விதிவழி வழாது வேள்வி வினையெலா நிரம்ப விங்ஙன்
அதிர்கட லுலகந் தேற வாற்றிநான் மறைக ளார்ப்பக்
கதிர்மணி நகையார் வாழ்த்தக் காமனைக் காய்ந்த நம்பி
மதிநுதன் மங்கை யோடு மணவறை தன்னிற் புக்கான்.

     (இ - ள்.) இங்ஙன் - இவ்வாறு, விதி வழி வழாது - விதி முறை
சிறிதும் தவறாது, வேள்வி வினையெலாம் நிரம்ப - மணச் சடங்குகளெல்லாம்
முற்றுப் பெற, அதிர் கடல் உலகம் தேற ஆற்றி - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த
உலகிலுள்ளோர் தெளிந்துய்யச் செய்து முடித்து, நான் மறைகள் ஆர்ப்ப -
நான்கு வேதங்களும் ஒலிக்கவும், கதிர் மணி நகையார் வாழ்த்த -
ஒளியினையுடைய முத்துப் போன்ற பற்களையுடைய மகளிர் வாழ்த்தவும்,
காமனைக் காய்ந்த நம்பி - மன்மதனையெரித்தருளிய பெருமான், மதி நுதல்
மங்கையோடும் - சந்திரனை ஒத்த நெற்றியையுடைய தடாதகைப்
பிராட்டியாரோடும், மண அறை தன்னில் புக்கான் - திருமண வறையிற்
புகுந்தருளினான் எ - று.