I


திருமணப் படலம்451



இடங்கள் மயங்குதலுற்று நின்றார்கள்; கான் இடம் நடனம் செய்யும்
கண்ணுதல் - புறங் காட்டிலே திருக்கூத்தாடியருளும் நெற்றிக் கண்ணனாகிய
இறைவனது, அருள்கண் நோக்கால் - திருவருட் பார்வையால், ஊன் இடர்
அகலும் நாளில் உயர்ந்தவர் இழிந்தோர் உண்டோ - பிறவித் துன்பம்
நீங்குங் காலத்தில் உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வேற்றுமையுண்டோ
(இல்லை யென்றபடி) எ - று.

     தான் : அசை. மயங்கி - கலந்து; களி மயக்குற்று என்றுமாம். ஊன் :
ஈண்டுப் பிறவிக்காயிற்று;

"ஊன டைந்த வுடம்பின் பிறவியே"

என்பது திருத்தொண்டர் புராணம். மேல் 175-ஆம் செய்யுளில்
'அடியினீழல் கலந்துளார் தம்மை யொத்தார்' என்பதனையும் ஈண்டு நோக்குக. இவ்விரு செய்யுளும் வேற்றுப் பொருள் வைப்பணி. (191)

மணவறைத் தவிசினீங்கி மன்றன்மண் டபத்திற் போந்து
கணமணிச் சேக்கை மேவிக் கருநெடுங் கண்ணன் வாணி
துணைவனே* முதல்வா னோர்க்குஞ் சூழ்கணத் தொகைக்கு மென்றுந்
தணவறு செல்வந் தந்தோன் சாறுசால் சிறப்பு நல்கி.

     (இ - ள்.) கருநெடுங் கண்ணன் வாணி துணைவனே முதல்
வானோர்க்கும் - கரிய நெடிய திருமால் கலைமகள் தலைவனாகிய பிரமன்
முதலிய தேவருக்கும், சூழ்கணத் தொகைக்கும் - சூழ்ந்த சிவகணக்
கூட்டத்திற்கும், என்றும் தணவு அறுசெல்வம் தந்தோன் - எப்பொழுதும்
நீங்குதலற்ற செல்வத்தை அருளிய இறைவன், மண அறைத் தவிசின் நீங்கி
- திருமண அறையிலுள்ள இருக்கையினின்றும் நீங்கி, மன்றல் மண்டபத்தில்
போந்து - திருமண மண்டபத்தில் வந்து, கண மணிச் சேக்கை மேவி -
கூட்டமாகிய மணிகள் இழைத்த அரியணையில் வீற்றிருந்து, சாறுசால் சிறப்பு
நல்கி - திருமணத்திற்கு அமைந்த வரிசைகளை (அவ்வினைவருக்கும்)
கொடுத்தருளி எ - று.

     கருமையென முன்வந்தமையின் கண்ணன் என்பது பெயர்
மாத்திரையாய் நின்றது;

"கருங்கண் ணனையறி யாமை நின்றோன்"

என்னும் திருக்கோவையார்ச் செய்யுளுரையில் "கண்ண னென்பது கரியோ
னென்னும் பொருளதோர் பாதகச் சிதைவு; அஃது அப் பண்பு குறியாது
ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார்; சேற்றிற் பங்கய
மென்றாற் போல" எனப் பேராசிரியர் விளக்கியிருத்தல் காண்க.: ஏகாரம்
கண்ணனென்பதனோடும் இயையும். தணவு - தணத்தல் : தொழிற் பெயர்.
சாறு - விழா. தந்தோன் அவர்க்கு நல்கியென்க. (192)

ஏட்டுவாய் முளரி யான்மா லேனைவா னவருந் தத்தம்
நாட்டுவாழ் பதியிற் செல்ல நல்விடை கொடுத்து வேந்தர்க்
காட்டுவா னாடிக் காட்டுந் தன்மைபோ லரசு செய்து
காட்டுவா னாகி யையன் றிருவுளக் கருணை பூத்தான்.

     (பா - ம்.) * துணைவனை.