I


திருமணப் படலம்453



"என்று தொட்டுநீ திசையின்மேற் சயங்குறித்
     தெழுந்து போந்தனை யாமும்
அன்று தொட்டுநம் மதுரைவிட் டுனைவிடா
     தடுத்து வந்தனம்" என இறைவன் பிராட்டிக்குக் கூறினமையும் நோக்குக.
(194)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
விண்டவழ் மதியஞ் சூடுஞ் சுந்தர விடங்கப் புத்தேள்
கொண்டதோர் வடிவுக் கேற்பக் குருதிகொப் பளிக்குஞ் சூலத்
திண்டிறற் சங்கு கன்னன் முதற்கணத் தேவர்* தாமும்
பண்டைய வடிவ மாறிப் பார்த்திவன் பணியி னின்றார்.

     (இ - ள்.) விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப் புத்தேள் -
வானின் கண் தவழும் சந்திரனையணிந்த பேரழகனாகிய சோம சுந்தரக்
கடவுள். கொண்டது ஓர் வடிவுக்கு ஏற்ப - கொண்டருளிய ஒப்பற்ற
திருக்கோலத்திற்குப் பொருந்த, குருதி கொப்பளிக்கும் சூலம் - உதிரம்
கொப்பளிக்கும் சூலப்படையையுடைய, திண் திறல் சங்கு கன்னன் முதல்
கணத்தேவர் தாமும் - மிகுந்த வலியையுடைய சங்கு கன்னன் முதலான
சிவகணத்தவர்களும், பண்டைய வடிவம் மாறி - முன் உருவம் நீங்கி (அரசர்
பணி செய்தற் கேற்ற உருக்கொண்டு), பார்த்திவன் பணியில் நின்றார் -
அம்மன்னன் ஏவலில் நின்றார்கள் எ - று.

     சுந்தர விடங்கம், திண்டிறல் என்பன ஒரு பொருட் பன்மொழிகள்.
கணமாகிய தேவர். (195)

தென்னவர் வடிவங் கொண்ட சிவபர னுலகங் காக்கும்
மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறையா றென்று
சொன்னது மன்ன ரெல்லாந் துணிவது பொருட்டுத் தானும்
அந்நகர் நடுவூ ரென்றோ ரணிநகர் சிறப்பக் கண்டான்.

     (இ - ள்.) உலகம் காக்கும் மன்னவர் - உலகத்தைக் காவல் பூண்ட
வேந்தர்கள், சிவனைப் பூசை செய்வது - சிவபெருமானைப் பூசிப்பது, மறை
ஆறு என்று சொன்னது - வேத நெறி என்று தான் திருவாய்
மலர்ந்தருளியதை, மன்னர் எல்லாம் துணிவது பொருட்டு - அரசரனைவரும்
துணிந்து மேற்கொள்ளுதற் பொருட்டு, தென்னவர் வடிவம் கொண்ட சிவபரன்
தானும் - பாண்டியர் திருக்கோலங் கொண்ட இறைவனும், அ நகர் -
அந்நகரில், நடுவூர் என்று ஓர் அணி நகர் சிறப்பக் கண்டான் - நடுவூர்
என்று சொல்லப்படும் ஓர் அழகிய நகரை மேன்மைப்பட ஆக்கினான் எ-று.

     கோலம் பாண்யரனைவர்க்கும் பொதுவாகலின் 'தென்னவர்' எனப்
பன்மை கூறினார். வேத நெறியென்று வேதத்திற் சொன்னதென்க. செய்வது,
துணிவது : தொழிற் பெயர்கள். (196)


     (பா - ம்.) * கணதேவர்.