I


458திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அரைக்குமே லுலகே ழென்று மரைக்குக் கீழுலகே ழென்றும்
உரைக்கலா லுலக மெல்லா முருவமாம் புருடற் கிந்தத்
தரைக்குமே லனந்தந் தெய்வத் தானமுண் டனைத்துங் கூறின்
வரைக்குறா சிலதா னங்கள் வகுத்துரை செய்யக் கேண்மின்.

     (இ - ள்.) அரைக்கு மேல் உலகு ஏழ் என்றும் - இடைக்கு மேல்
ஏழுலகமென்றும், அரைக்குக் கீழ் உலகு ஏழ் என்றும் - இடைக்குக் கீழ்
ஏழுலகென்றும், உரைக்கலால் - சொல்லப்படுதலால், உலகம் எல்லாம்
உருவம் ஆம் புருடற்கு - உலகமனைத்தும் உருவமாகிய புருடனுக்கு. இந்தத்
தரைக்கு மேல் அனந்தம் தெய்வத்தானம் உண்டு - இந்நிலவுலகில்
அளவிறந்த தெய்வத்தன்மை பொருந்திய தானங்கள் உள; அனைத்தும் கூறின்
வரைக்கு உறா - அவை முழுதும் எடுத்துச் சொல்லப்புகின் ஓரளவுக்கு
உட்படா; சில தானங்கள் வகுத்து உரை செய்யக் கேண்மின் - (ஆதலான்)
சில திருப்பதிகளை மட்டும் வகுத்துக் கூறக் கேளுங்கள் எ - று.

     அரை : இடைக்கு எண்ணலளவையால் வந்த பெயர். உரைக்கலால்
- நூல்களிற் கூறப்படுதலால்; நூல்கள் கூறுதலால் எனலுமாம்; கு : சாரியை,
அல் : தொழிற் பெயர் விகுதி. உலகமெல்லாம் - பதினான்கு உலகங்களும்.
தரைக்கு மேல் - தரையில்; கு : சாரியை, மேல் : ஏழனுருபு. வரைக்கு -
அளவுக்கு. உறா - உட்படா. (5)

திருவள ராரூர் மூலந் திருவானைக் காவே குய்யம்*
மருவளர் பொழில்சூ ழண்ணா மலைமணி பூர நீவிர்
இருவருங் கண்ட மன்ற மிதயமாந் திருக்கா ளத்தி
பொருவருங் கண்ட மாகும் புருவமத் தியமாங் காசி.

     (இ - ள்.) திருவளர் ஆரூர் மூலம் - செல்வமோங்கும் திருவாரூர்
மூலத்தானமாம்; திருவானைக்காவே குய்யம் - திருவானைக்கா
சுவாதிட்டானத்தானமாம்; மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம்
- மணம் ஓங்கும் சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மணி பூரத்தானமாம்;
நீவிர் இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் - நீங்கள் இருவரும் தரிசித்த
தில்லைப்பதி இதயத்தானமாகும்; திருக்காளத்தி பொருவு அரும் கண்டம்
ஆகும் - திருக்காளத்தி ஒப்பில்லாத கண்டத்தானமாகும்; காசி புருவ
மத்தியம் ஆம் - காசி புருவ மத்தியத்தானமாகும் எ - று.

     குய்யம் - மறைவிடம்; சுவாதிட்டானத்தைக் குறிக்கின்றது. இதயம் -
அநாகதம். கண்டம் - விசுத்தி. புருவ மத்தியம் - ஆஞ்ஞை. ஆதார
முறையாற் கூறப்பட்டமையின் பஞ்சபூதத்தானங்களுள் ஆகாயத் தானம்
வாயுத்தானத்தினும் முற்கூறப்பட்டது. மன்றத்தையுடைய பதியை
மன்றமென்றார். ஆம் என்பதனை மூலம் முதலியவற்றோடும் கூட்டிக் கொள்க. ஏ : அசை, (6)

பிறைதவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம்
அறைதரு துவாத சாந்த மதுரையீ ததிக மெந்த

     (பா - ம்.) * காவே நாபி.