I


460திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இசைக்கற் பாற்று - வேறு யாதெனக் கூறும் பகுதியையுடையது எ - று.

     என்பது : அசையுமாம். ஈற்றிலுள்ள ஏகாரம் அசை. (9)

அன்னதோர் தவிசி னும்ப ராயிரங் கரத்தா லள்ளித்
துன்னிருள் விழுங்குங் கோடி சூரிய ரொரு காலத்து
மன்னின ருதித்தா லொப்ப மனமொழி பக்கங் கீழ்மேற்
பின்முதல் கடந்த ஞானப் பேரொளி வடிவாய்த் தோன்றி.

     (இ - ள்.) அன்னது ஓர் தவிசின் உம்பர் - அத் தன்மையதாகிய
ஒப்பற்ற பீடிகையின் மேல், ஆயிரம் கரத்தால் அள்ளித் துன் இருள்
விழுங்கும் - ஆயிரங் கைகளினால் அள்ளிச் செறிந்த இருளை விழுங்குகின்ற,
கோடி சூரியர் ஒரு காலத்து மன்னினர் உதித்தால் ஒப்ப - கோடி சூரியர்கள்
ஒரே காலத்தில் நிலைபெற்று உதித்தாற்போல, மனம் மொழி பக்கம் கீழ்
மேல் பின் முதல் கடந்த - உள்ளம் உரை பக்கம் கீழ் மேல் பின் முன்
என்னும் இவற்றைக் கடந்த, ஞானப் பேர் ஒளி வடிவாய்த் தோன்றி -
மெய்ஞ்ஞானமாகிய பெரிய ஒளி வடிவமாகத் தோன்றி எ - று.

     கரம் - கை, கிரணம். இறைவன் எல்லாவற்றையும்
கடந்திருக்குமியல்பினை,

"ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்"

எனத் திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது. (10)

முந்துறு கணங்கள் மொந்தை தண்ணுமை முழக்கஞ் செய்ய
நந்திமா முழவந் தாக்க நாரண னிடக்கை யார்ப்ப
வந்துகந் தருவ நூலின் மரபுளி யிருவர் பாட
ஐந்துதுந் துபியுங் கல்லென் றார்கலி முழக்கங் காட்ட.

     (இ - ள்.) முந்துறு கணங்கள் - முதன்மையான சிவகணங்கள்,
மொந்தை தண்ணுடை முழக்கம் செய்ய - மொந்தை தண்ணுமைகளை
முழக்கவும், நந்திமா முழவம் தாக்க - திருநந்திதேவர் பெரிய மத்தளத்தை
அடிக்கவும், நாரணன் இடக்கை ஆர்ப்ப - திருமால் இடக் கையை
ஒலிக்கவும், இருவர் வந்து - தும்புரு நாரதர் என்னுமிருவரும் வந்து, கந்தருவ
நூலின் மரபுளிபாட - இசை நூலின் வழியே பாடவும், துந்துபி ஐந்தும்
கல்லென்று ஆர்கலி முழக்கம் காட்ட - ஐந்து துந்துபிகளும் கல்லென்னும்
ஒலியோடு கடலின் ஒலியைக் காட்டவும் எ - று.

     ஆர்ப்பிக்கவென்பது, ஆர்ப்பவென நின்றது. கந்தருவ நூல் - இசை
நூல். மரபுளி - முறையால்; உளி மூன்றன் பொருள்படும் இடைச்சொல்.
கல்லென்று : ஒலிக் குறிப்பு. (11)