I


464திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     புலவர் - தேவர். சிறப்பிலராகிய மக்களுமென்பார் 'காணவந்த
மனிதரும்' என உம்மை கொடுத்தார். மாதவராற் கண்டமையை மாதவர்
பொருட்டாற் கண்டாரென்றார்; மாதவர் நிமித்தமாயினமையாலென்க. மன்னும்
ஓவும் அசைகள். (18)

அனந்தனா முனிவர் வேந்த னளவிலா னந்த மூறி
மனந்தனி நிரம்பி மேலும் வழிவது போல மார்பம்
புனைந்தபுண் ணியவெண் ணீறுகரைந்திடப் பொழிகண் ணீருள்*
நனைந்திரு கரமுங் கூப்பி நாதனைப் பாடு கின்றான்.

     (இ - ள்.) அனந்தனாம் முனிவர் வேந்தன் - சேடனாகிய முனிவர்
மன்னன், அளவு இல் ஆனந்தம் ஊறி - அளவில்லாத இன்பமானது
ஊற்றெடுத்து, மனம் தனில் நிரம்பி - உள்ளத்தில் நிரம்பி, மேலும் வழிவது
போல - மேலேயும் வழிந்து வருவது போல, மார்பம் புனைந்த புண்ணிய
வெள் நீறு கரைந்திட - மார்பில் தரித்த புண்ணியமாகிய வெள்ளிய திருநீறு
கரையுமாறு, பொழிகண் நீருள் நனைந்து - பொழிகின்ற ஆனந்தக்
கண்ணருவியில் நனைந்து, இருகரமும் கூப்பி - இரண்டு கைகளையும் குவித்து, நாதனைப் பாடுகின்றான் - இறைவனைத் துதிப்பாராயினார் எ - று.

     ஆதிசேடனே பதஞ்சலியாக வந்தனனென்பார் 'அனந்தனா முனிவர்
வேந்தன்' என்றார். வழிவது போலப் பொழி கண்ணீரென்க. திருநீறானது
புண்ணியராற் பூசப்படுவதும் புண்ணியத்தைப் பயப்பதுமாகலின் 'புண்ணிய
வெண்ணீறு' என்றார்.

"புண்ணிய மாவது நீறு" "புண்ணியர் பூசும்வெண் ணீறு"

எனத் தமிழ் மறை கூறுதல் காண்க. கண்ணீரும் என்னும் பாடம்
சிறப்பின்றென்க. (19)

பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி
சராசர மாகி வேறாய் நின்றதற் பரனே போற்றி
கராசல வுரியாய் போற்றி கனகவம் பலத்து ளாடும்
நிராமய பரமா னந்த நிருத்தனே போற்றி போற்றி.

     (இ - ள்.) பராபர முதலே போற்றி - முன்னும் பின்னுமாகிய
முதல்வனே வணக்கம்; பத்தியில் விளைவாய் போற்றி - அன்பின்
விளைவானவனே வணக்கம்; சராசரம் ஆகி வேறாய் நின்ற தற்பரனே
போற்றி - சரமும் அசரமும் ஆகியும் அவற்றின் வேறாகியும் நின்ற சிவபரம்
பொருளே வணக்கம்; கராசல உரியாய் போற்றி - யானைத் தோலைப்
போர்த்தவனே வணக்கம்; கனக அம்பலத்துள் ஆடும் -
பொன்னம்பலத்தின்கண் திருநிருத்தம் செய்தருளும், நிராமய பரமானந்த
நிருத்தனே போற்றி போற்றி - பிறவிப் பிணியைப் போக்கும் பேரின்பத்
திருக்கூத்தினை உடையவனே வணக்கம் வணக்கம் எ - று.


     (பா - ம்.) * கண்ணீரு நனைந்து.