I


466திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"நெருநலையா யின்றாகி நாளையாகி"
"பெருநலமுங் குற்றமும்"

எனக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. நடுவும் முடிவுங் கூறினமையின்
முதலுங் கொள்க. (21)

அடியரேம் பொருட்டு வெள்ளி யம்பலத் தாடல் போற்றி
பொடியணி தடந்தோள் போற்றி புரிசடை மகுடம் போற்றி
கடியவிழ் மலர்மென் கூந்தற் கயல்விழி பாகம் போற்றி
நெடியதற் பரமா னந்த* நிருத்தனே போற்றி போற்றி.

     (இ - ள்.) அடியரேம் பொருட்டு - அடியேங்கள் நிமித்தமாக,
வெள்ளி அம்பலத்து ஆடல் போற்றி - வெள்ளியம்பலத்தின்கண்
ஆடப்பெறும் திருக்கூத்துக்கு வணக்கம்; பொடி அணி தடம் தோள்
போற்றி - திருநீறு தரித்த பெரிய திருத் தோள்களுக்கு வணக்கம்; புரிசடை
மகுடம் போற்றி - முறுக்கமைந்த சடைமுடிக்கு வணக்கம்; கடி அவிழ் மலர்
மென் கூந்தல் கயல்விழி பாகம் போற்றி - மணத்தொடு மலர்ந்த மலர்களை
அணிந்த மெல்லிய கூந்தலையுடைய அங்கயற்கண்ணம்மையார்
அமர்ந்திருக்கும் இடப்பாகத்துக்கு வணக்கம்; நெடியதற் பரமானந்த
நிருத்தனே போற்றி போற்றி - என்றும் அழியாத மேலான சிவானந்தத்
திருக்கூத்தினை உடையவனே நினக்கு வணக்கம் வணக்கம் எ - று.

     அடியரேம் : படர்க்கை விகுதி கெடாது தன்மை விகுதியும் பெற்றது.
தற்பரம ஆனந்தம் - மேலாகிய சிவானந்தம். (22)

என்றுநின் றேத்தி னான்பின் னிருவரை நோக்கி வெள்ளி
மன்றுணின் றாடா நின்ற மறைமுதல் கருணை கூர்ந்து
நன்றுநீர் வேட்ட தென்னென் றருள்செய நாதன் பாதந்
துன்றுமெய் யன்பிற் றாழ்ந்து தொழுதுநின் றிதனைச் சொல்வார்.

     (இ - ள்.) என்று நின்று ஏத்தினான் - என்று வணங்கி நின்று
துதித்தான்; வெள்ளி மன்றுள் நின்று ஆடாநின்ற மறைமுதல் -
வெள்ளியம்பலத்துள் நின்று திருக்கூத்தாடும் வேத முதல்வனாகிய இறைவன்,
பின் - பின்பு, இருவரை நோக்கி கருணை கூர்ந்து - பதஞ்சலி
வியாக்கிரபாதர் இருவரையும் பார்த்துக் கருணை மிகுந்து, நன்று - நல்லது;
நீர் வேட்டது என்னென்று அருள் செய - நீவிர் விரும்பியது யாதென்று
வினவியருள, நாதன் பாதம் துன்றும் மெய் அன்பில் - அவ்விறைவன்
திருவடியில் மிக்க உண்மை யன்பினால், தாழ்ந்து தொழுது நின்று இதனைச்
சொல்வார் - விழுந்து வணங்கி நின்று இதனை வேண்டுவாராயினர் எ - று.

     நன்று என்றது உவப்பின் குறிப்பு; நன்று வேட்ட தென்னலுமாம். (23)


     (பா - ம்.) * நெடியநற் பரமானந்த; நெடியவ பரமானந்த.