I


470திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

[கலிநிலைத்துறை]
பன்ன கேசனு மடுபுலிப் பாதனும் பணிய
மின்னு வார்சடை மன்னவன் வெள்ளிமன் றாடல்
சொன்ன வாறிது பசித்தழல் சுடவொரு பூதம்
அன்ன மாமலை தொலைத்தவா றெடுத்தினி யறைவாம்.

     (இ - ள்.) மின்னுவார் சடை மன்னவன் - ஒளிவீசும் நீண்ட
சடையையுடைய இறைவனாகிய சுந்தரபாண்டியன், பன்னகேசனும் -
பாம்புகளின் இறையாகிய பதஞ்சலி முனியும், அடு புலிப் பாதனும் -
கொல்லும் புலியின் காலையுடைய வியாக்கிரபாத முனியும், பணிய - வணங்க,
வெள்ளி மன்று - வெள்ளியம்பலத்துள், ஆடல் சொன்னவாறு இது -
ஆடியருளிய திருவிளையாடலைக் கூறிய வரலாறு இதுவாகும்; பசித்தழல் சுட
ஒரு பூதம் - பசித் தீயானது சுட்டு வருத்துதலால் ஒரு பூதமானது, அன்னம்
மாமலை தொலைத்தவாறு - அன்னமாகிய பெரிய மலையை உண்டொழித்த
திருவிளையாடலை, எடுத்து இனி அறைவாம் - இனி எடுத்துக் கூறுவாம்
எ - று.

     பன்னகேசன் - அரவரசன் : குணசந்தி. அடு : புலிக்கு அடை,
சோமசுந்தரக் கடவுளே சுந்தரபாண்யனாகலின் 'சடைமன்னவன்' என்றார்.
இவ்வரலாறு ஆடலைச் சொன்னபடியெனலுமாம். உண்டு தீர்த்தலைத்
தொலைத்தல் என்பது வழக்கு;

"வெங்கட் டொலைச்சியும்"
"மான்சுணந் தொலைச்சிய"

என்பன புறநானூறு. (1)

கன்னி யர்க்கர சாயினாள் கடிமனை புகுந்த
மின்னி யற்சடை மாதவர் வேதிய ரேனோர்
எந்நி லத்துள மன்னவர் யாவர்க்கு முறையே
பொன்னி யற்கலத் தறுசுவைப் போனக மருத்தா.

     (இ - ள்.) கன்னியர்க்கு அரசு ஆயினாள் - மங்கையர்க்கு
அரசியாகிய தடாதகைப் பிராட்டியார், கடிமனை புகுந்த - (திருமணத்தின்
பொருட்டு) அரண்மனையில் வந்த, மின் இயல் சடை மாதவர் - மின்
போலும் ஒளி பொருந்திய சடையையுடைய முனிவரும், வேதியர் -
மறையோரும், ஏனோர் - ஏனையரும், எந்நிலத்துள மன்னவர் -
எந்நாட்டிலுமுள்ள மன்னவருமாகிய, யாவர்க்கும் - அனைவருக்கும்,
முறையே - முறைப்படி, பொன் இயல் கலத்து - பொன்னலமைந்த
கலங்களில், அறுசுவைப் போனகம் அருத்தா - அறுசுவையுடன் கூடிய
உணவை உண்பித்து எ - று.