I


குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்475



பன்மை யெதிர்கால வினை முற்று; சொல் பகுதி, தும் விகுதி. ஆல் : அசை.
தளர்ந்து, புதைந்து என்னும் சினை வினையாய செய்தெனெச்சங்கள் நடந்தான்
என்னும் முதல் வினையைக் கொண்டு முடிந்தன. (11)

படைக்க ணேவல ரிறைமகள் பணியினாற் பசிநோய்
தொடுத்த வன்றனைக் கொண்டுபோய்ச் சொன்றிமுன் விடுத்தார்
அடுத்தி ருந்ததே கண்டன ரன்னமா மலையை
எடுத்த யின்றது மடிசிலங் கிருந்ததுங் காணார்.

     (இ - ள்.) படைக்கண் ஏவலர் - வாட்படைபோலுங் கண்களையுடைய
ஏவல் மகளிர், இறைமகள் பணியினால் - தங்கள் இறைவியின் ஏவலால், பசி
நோய் தொடுத்தவன் தனை - பசிநோயாற் பீடிக்கப்பட்ட குண்டோதரனை,
கொண்டு போய்ச் சொன்றி முன் விடுத்தார் - அழைத்துக் கொண்டு போய்ச்
சோற்றின் முன் விட்டார்கள்; அடுத்து இருந்ததே கண்டனர் - (அங்ஙனம்
விட்டவர்கள்) அவன் போய் அச் சோற்றை அடுத்து இருந்ததையே கண்டனர்; அன்னம் மாமலையை எடுத்து அயின்றதும் - அன்னமாகிய பெரிய மலையை
எடுத்து உண்டதையும், அங்கு இருந்த அடிசிலும் காணார் - அங்கிருந்த
அன்னத்தையும் கண்டிலர் எ - று.

     படையென்பதை முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு படைத்தற்
றொழிலினின்ற ஏவலர் என்றுரைப்பாருமுளர்; வரும் பாட்டிலும் மகளிரையே
கூறுதலின் அவ்வுரை பொருந்தாதென்க. சொன்றி : திசைச் சொல். அன்னம்
ஆம் மலையெனப் பிரித்தலுமாம். எடுத்தயின்றதுங் காணார் என்றது உண்ட
விரைவினைக் குறிப்பிட்டவாறு. (12)

சிலம்பு நூபுரச் சீறடிச் சேடியர் சில்லோர்
அலம்பு வால்வளைக் கைநெரித் ததிசய மடைந்தார்
புலம்பு மேகலை யார்சிலர் பொருக்கென வெருண்டார்
கலம்பெய் பூண்முலை யார்சிலர் கண்புதைத் திரிந்தார்.*

     (இ - ள்.) சிலம்பும் நூபுரம் சிறு அடிச் சேடியர் சில்லோர் - ஒலிக்கும்
சிலம்பினையணிந்த சிறிய அடியையுடைய பணிப் பெண்டிர் சிலர், அலம்பு
வால் வளைக்கை நெரித்து அதிசயம் அடைந்தார் - ஒலிக்கும் வெள்ளிய
வளையணிந்த கையை நெரித்து வியப்புற்றார்; புலம்பு மேகலையார் சிலர் -
ஒலிக்கும் மேகலையணிந்த சிலர், பொருக்கென வெருண்டார் -
பொருக்கென்று பயந்தார்; கலம் பெய் பூண் முலையார் சிலர் - அணிகலம்
அணிந்த கொங்கைகளையுடைய சிலர், கண் புதைத்து இரிந்தார் - கண்களை
மூடிக் கொண்டு ஓடினார் எ - று.

     கை நெரித்தலும் கண் புதைத்தலும் அச்சத்தால் நிகழ்வன; அச்சம்
மகளிர்க்கு இயல்பாய குணங்களிலொன்றாதலும் நோக்குக. பொருக்கென,
விரைவுக் குறிப்பு. பூண் கலம் எனக் கூட்டுக. (13)


     (பா - ம்.) * கண்புதைத்திருந்தார்.