I


476திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



முரவை போகிய முருவில்வான் மூரல்பால் வறையல்
கருனை தீம்பய றடுதுவை பலவகைக் கறிகள்
விரவு தேம்படு பாறயி ரிழுதுதேன் வெள்ளம்
வரைவி லாதன மிடாவொடு வாரிவாய் மடுத்தான்.

     (இ - ள்.) முரவை போகிய - வரி நீங்கிய, முரிவு இல் வால் மூரல் -
முரிதலில்லாத வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தையும், பால் வறையல் -
பால் பெய்து அட்டதுவட்டலும், கருனை - பொரிக் கறியும், தீம்பயறு
அடுதுவை பலவகைக் கறிகள் - இனிய பயற்றொடு கலந்து சமைத்த
புளியங்கறியும் ஆகிய பலவகைக் கறிகளையும், விரவு தேம்படு பால் தயிர்
இழுது தேன் வெள்ளம் - பொருந்திய இனிமை பெற்ற பாலும் தயிரும்
நெய்யும் தேனுமாகிய இவற்றின் பெருக்கினையும், வரைவு இலாதன - (மற்றும்)
அளவில்லாத பண்டங்களையும், மிடாவொடு வாரி வாய் மடுத்தான் -
மிடாக்களோடு வாரி வாரி உண்டான் எ - று.

     முரவை - தவிடு நீங்குமுன் அரிசியிலிருக்கும் சிவந்த வரி.

"முரவை போகிய முரியா வரிசி"

என்னும் பொருநராற்றுப்படையடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள்
காண்க; அதிலுள்ள
"பால்வறைக் கருனை" என்பதற்கு அவர் "பாலைப்
பொரித்ததனோடே கூட்டிய பொரிக்கறிகள்" என்பர். துவை - இக்காலத்துத்
துவையலென வழங்கும். (14)

பல்ப ழக்குவை வேற்றுருப் பண்ணியங் கன்னன்
மெல்சு வைத்தண்டு தெங்கிவை யன்றியும் வேவா
வல்சி காய்களின் வருக்கமு நுகர்ந்துமா றாமல்
எல்லை தீர்நவ பண்டமு மெடுத்துவாய் மடுத்தான்.

     (இ - ள்.) பல் பழக் குவை - பல கனிக் குவியல்கள், வேறு உரு
பண்ணியம் - வெவ்வேறு வடிவப் பண்ணிகாரங்கள், கன்னல் - சருக்கரை,
மெல் சுவைத் தண்டு - மெல்லுதற்குரிய சுவையினையுடைய கரும்பு, தெங்கு
- தேங்காய், இவை அன்றியும் - ஆகிய இவை அல்லாமலும், வேவா வல்சி
அரிசியும், காய்களின் வருக்கமும் - காய்களின் கூட்டமும் என்னும்
இவற்றையெல்லாம், நுகர்ந்தும் மாறாமல் - உண்டும் பசி தீராமையினால்,
எல்லைதீர் நவபண்டமும் எடுத்துவாய் மடுத்தான் - அளவிறந்த
நவதானியங்களையும் வாரி உண்டான் எ - று.

     பண்ணியம் - பண்ணிகாரம்; சுவைத் தண்டு எனப் பின்வருதலின்
கன்னல் என்பது சருக்கரைக்காயிற்று. மெல் சுவைத் தண்டு : வினைத்தொகை.
தெங்கு ஆகுபெயர். வல்சி - உணவு; வேவாவல்சி - அரிசி. நவபண்டம் -
எள் முதலியன; புதிய பண்டம் என்றுமாம். (15)

பாரித் துள்ளவிப் பண்டமும் பரூஉக்குறுங் கையால்
வாரித் தன்பெரு வயிற்றிடை வைப்பவுந் துடுவை
பூரித் தாகுதி பண்ணிய தழலெனப் பொங்கிக்
கோரித் தொன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த.