I


குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்479



     (இ - ள்.) நட்டம் ஆடிய சுந்தர - வெள்ளியம்பலத்தில்
திருக்கூத்தாடிய சுந்தரபாண்டிய, நங்கை எம்பிராட்டி - மகளிருட் சிறந்த எம்
பிராட்டியார், அட்ட போனகம் - சமைப்பித்தருளிய அமுது வகைகள்,
பனிவரை அனையவாய்க் கிடந்த - இமயமலை போற் கிடந்தன; தொட்டுவாய்
மடுத்திடவும் - அவற்றை எடுத்து உண்ணவும், என் சுடு பசி தணியாது -
எனது சுடுகின்ற பசி தணியாமல், இட்டு உணாதவர் வயிறு போல் -
(முற்பிறப்பில்) ஐயமிட்டு உண்ணாதவர் வயிறு (இப்பிறப்பில் வறுமையினால்
காந்துவது) போல, காந்துவது என்றான் - எரிகின்றது என்றான் எ - று.

     கிடந்தவெனப் பன்மை வினை வந்தமையின் உணவுகள் எனக் கொள்க.
பிறர்க்கு ஈயாது சேமித்து வைத்தவர் அப்பொருளையிழந்த பொழுது அவர்
வயிறு எரிவதுபோல் எனவுரைப்பாரு முளர். (21)

கையர் முப்புரத் திட்டதீக் கடும்பசி யுருவாய்ப்
பொய்ய னேன்வயிற் றிடைக்குடி புகுந்ததோ வென்னுங்
கையெ றிந்திடு மண்டங்கள் வெடிபடக் கதறும்
ஐய கோவெனு முயிர்த்திடு மாவிசோர்ந் தயரும்.

     (இ - ள்.) கையர் முப்புரத்து இட்ட தீ - வஞ்சகர்கள் மூன்று
புரங்களிலும் இட்ட நெருப்பானது, கடும்பசி உருவாய் - கடிய பசி வடிவமாய்
(வந்து), பொய்யனேன் வயிற்றிடை - பொய்மையேனது வயிற்றின்கண், குடி
புகுந்ததோ என்னும் - குடி புக்கதோ என்பான், கை எறிந்திடும் - கையை
ஒன்றோடொன்று தாக்குவான்; அண்டங்கள் வெடிபடக் கதறும் - அண்டங்கள் பிளக்குமாறு கதறுவான் : ஐயகோ எனும் - ஐயகோ என்பான்; உயிர்த்திடும் -
பெருமூச்செறிவான்; ஆவி சோர்ந்து அயரும் - உயிர் சோர்ந்து அயருவான்
எ- று.

     ஐயகோ : இரக்க விடைச் சொல்; ஐயோவென வழங்கும். (22)
ஆகச் செய்யுள் - 847.