I


480திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



8. அன்னக்குழியும் வையையும் அழைத்த படலம்

வேத நாயகன் பாரிட வேந்தனுக்கமையா
ஓத னாதிக ளருத்திய தன்மையீ துவையும்
போத ராமையா லமைவுறப் போனகக் குழிதந்
தோத மாநதி யருத்திய செய்தியு முரைப்பாம்.

     (இ - ள்.) வேத நாயகன் - மறை முதல்வனாகிய சோமசுந்தரக்
கடவுள், பாரிட வேந்தனுக்கு - பூதகணத் தலைவனாகிய குண்டோதரனுக்கு,
அமையா ஓதன ஆதிகள் அருத்திய முறை ஈது - நிரம்பாத அன்ன
முதலியவைகளை உண்பித்த திருவிளையாடல் இது; உவையும்
போதராமையால் - அவை போதாமையால், அமைவு உற - நிரம்புதல்
பொருந்த, போனகக் குழி தந்து - அன்னக் குழியைத் தந்தருளி, ஓதம் மா
நதி அருத்திய செய்தியும் உரைப்பாம் - பெரிய வெள்ளத்தினையுடைய
நதியை அழைத்து உண்பித்த திருவிளையாடலையும் கூறுவாம் எ - று.

     அமைதல் - பசியினளவுக்குப் பொருந்துதல். போதாமையென்பது
விரிந்து நின்றது. பசிக்கு அன்னக்குழியும், நீர் வேட்கைக்கு நதியுமென்க. (1)

கவன மால்விடை யாளிபின் கடிகமழ் தென்றற்
பவன மாமலை யாட்டியைப் பார்த்துளே நகைத்துத்
தவன மாபசி யுடையவன் றன்பொருட் டன்ன
புவன மாதினை நினைத்தன னினைக்குமுன் போந்தாள்.

     (இ - ள்.) கவனம் மால் விடை யாளி - விரைந்த செலவினையுடைய
பெரிய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுள், பின் - பின்பு, கடிகமழ்
தென்றல் பவனம் மா மலையாட்டியைப் பார்த்து - மணங்கமழுந் தென்றற்
காற்றினையுடைய பெரிய பொதியின் மலையையுடைய தடாதகைப்
பிராட்டியாரை நோக்கி, உள்ளே நகைத்து - திருவாய்க்குள்ளே முறுவலித்து,
தவனம் மா பசி உடையவன் தன் பொருட்டு - எரிக்கின்ற பெரிய
பசியையுடைய குண்டோதரன் பொருட்டு, அன்ன புவன மாதினை - (தனது
சத்தியாகிய) அன்ன புவனத்திற்குரிய அன்ன பூரணியை, நினைத்தனன் -
கருதியருளினான்; நினைக்கு முன் போந்தாள் - நினைத்தவளவில் (அன்ன
வடிவமாய்) வருகின்றாள் எ - று.

     மலையாட்டி - மலையை ஆள்பவள். சிறிதே நகைத்தென்பார் 'உள்ளே
நகைத்து' என்றார். தவனம் என்பதற்குத் தாகம் என்றும், அன்ன புவன மாது
என்பதற்கு அன்னந் தரும் பூமிதேவி என்றும் உரைப்பாரு முளர். (2)