(இ
- ள்.) அத்தயிர்ப் பதக் கிடங்கரில் - அந்தத் தயிர்ச் சோற்றுக்
குழியிலே, அலைகடல் கலக்கும் மத்து என - அலைக்கின்ற கடலைக்
கலக்கும் மத்தைப் போல, கரம் புதைத்து எடுத்து எடுத்து வாய் மடுத்துத்
துய்த்திட - கையைச் செருகி வாரி வாரி வாயில் வைத்து உண்ண, சுருதி
நாயகன் தாள் பத்தி வைத்து வீடு உணர்ந்தவர் - வேத நாயகனாகிய
சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில் அன்பு செய்து வீட்டினையுணர்ந்த
பெரியாரது, பழவினைத் தொடர் போல் - சஞ்சித வினையின் தொடர்ச்சி
ஒழிதல் போல், பசி விடுத்தது - பசி நோய் விட்டொழிந்தது எ - று.
அலைத்தல்
- அலைவீசுதல். கையாற் சுழற்றியெடுத்தலின் 'மத்தென'
என்றார். அடுக்கு ஆர்வத்தில் வந்தது. (5)
வாங்கி வாங்கிவாய் மடுத்தலு முடம்பெலாம் வயிறாய்
வீங்கி னான்றரை கிழிபடப் பொருப்பென வீழ்ந்தான்
நீங்கு நீளுயிர்ப் பிலனுடல் புரண்டன னீர்வேட்
டாங்கு நீர்நிலை தேடுவா னாயினா னெழுந்தான். |
(இ
- ள்.) வாங்கி வாங்கி வாய் மடுத்தலும் - அங்ஙனம் வாரி வாரி
உண்ட வளவில், உடம்பு எலாம் வயிறாய் வீங்கினான் - உடலெல்லாம்
வயிறாகப் பருத்து, தரை கிழிபட பொருப்பு என வீழ்ந்தான் - பூமி கிழியுமாறு
மலை போல விழுந்து, நீங்கும் நீள் உயிர்ப்பு இலன் - வெளியே செல்லும்
நீண்ட உயிர்ப்பில்லாதவனாய், உடல் புரண்டனன் - உடம்பு புரண்டனன்; நீர்
வேட்டு எழுந்தான் ஆங்கு நீர் நிலை தேடுவானாயினான் - பின் நீரை
விரும்பி எழுந்து அவ்விடத்துள்ள நீர் நிலைகளைத் தேடுவானாயினான்
எ - று.
வயிறு
போலாதலை 'வயிறாய்' என்றார். வீங்கினான், வீழ்ந்தான்,
எழுந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்றுக்களும், இலன் என்னும்
எதிர் மறைக் குறிப்பு முற்றும் எச்சங்களாயின. (6)
ஆவி யன்னவர்ப் பிரிந்துறை யணங்கனார் போலக்
காவி நாண்மலர் தாமரைக் கடிமலர் வாட
வாவி யோடையுங் குளங்களும் வறப்பவாய் வைத்துக்
கூவ நீணிலை நீர்களும் பசையறக் குடித்தான். |
(இ
- ள்.) ஆவி அன்னவர்ப் பிரிந்து உறை அணங்கு அனார் போல
- உயிரினையொத்த தலைவரைப் பிரிந்துறையும் அணங்களைய தலைவியரைப்
போல, நாள் காவி மலர் தாமரைக் கடி மலர் வாட - அன்றலர்ந்த
நீலோற்பல மலர்களும் நறிய தாமரை மலர்களும் வாட்டமடைய, வாவி
ஓடையும் குளங்களும் வறப்ப வாய் வைத்து - நடை கிணறுகளும்
ஓடைகளும் குளங்களும் வறளுமாறு வாயினை வைத்து உரிஞ்சி, கூவம் நீள்
நீர் நிலைகளும் பசை அறக் குடித்தான் - கிணறுகளும் நீண்ட நீர்
நிலைகளும் பசையில்லையாகக் குடித்தான் எ - று.
அணங்கு
- தீண்டி வருத்தும் தெய்வப் பெண் என்பர். அணங்கனார்
வாடுதல் போல வாடவென்க. நிலை நீர் என்பதனை நீர் நிலையென மாற்றுக.
கூவனீணிலை எனப் பாடங் கொள்ளலுமாம். (7)
|