I


திருநாட்டுச் சிறப்பு49



பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட’ என்னும் பெரியபுராணச்
செய்யுள் மேற்கோளாகும். குறிஞ்சியும் முல்லையும் புன்னில மெனப்படும்.
ஓடு என்னும் எண்ணிடைச்சொல் பிறவிடத்துஞ் சென்றியையும். எள்ளு, உ :
சாரியை ஏற்றொடு எனற்பாலது விகாரப்பட்டது. (29)

துறவின ரீச னேசத் தொண்டினர் பசிக்கு நல்லூண்
திறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடற் பனிப்புக் காடை
உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழுகிச் செய்யும்
அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார்.

     (இ - ள்.) துறவினர் - துறந்தோரும், ஈசன் நேசத்தொண்டினர் -
சிவபிரானிடத்து அன்பினையுடைய திருத்தொண்டரும் ஆகியவர்களின்,
பசிக்கு நல்ஊண் - பசியைப்போக்க நல்ல உணவும், வினைத்திறப் பிணிக்கு
- வினைவகையாலாகிய நோய்க்கு, தீர்க்கும் மருந்து - நீக்குதற்குரிய
மருந்தும் உடல் பனிப்புக்கு ஆடை - மெய்யின் குளிரைப்போக்க உடையும்,
உறைவிடம் - தங்குமிடமும், பிறிதும் - வேறு பொருளுமாகிய இவற்றை,
நல்கி - கொடுத்து, அவர் அவர் ஒழுகிச் செய்யும் - அவரவர்கள் தத்தம்
நிலையில் வழுவாதொழுகிச் செய்கின்ற, அறவினை இடுக்கண் நீக்கி - அறத்
தொழிலுக்கு நேரும் இடையூறுகளைப் போக்கி, அருங்கதி உய்க்கவல்லார் -
அரிய வீட்டு நெறியில் (அவர்களைச்) செலுத்தவலலவராவர் எ - று.

"இல்வாழவா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை"

என்னும் திருக்குறளும், "இவரிவ் வொழுக்க நெறிகளை முடியச்
செல்லுமளவும் இச் செலவிற்குப் பசிநோய் குளிர் முதலியவற்றான் இடையூறு
வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி அவ்வந்
நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான் ‘நலலாற்றினின்ற துணை’ என்றார்"
எனப் பரிமேலழகர் கூறிய உரையும் இங்கே நோக்கற்பாலன. திறவினை
வினைத்திறமென மாற்றப்பட்டது. (30)

நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த
பொச்சமி லன்பு மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன
அச்சமுங் கொண்டு கூசி யடிபணிந் தினிய கூறி
இச்சையா றொழுகி யுள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார்.

     (இ - ள்.) நிச்சலும் - நாள் தோறும், ஈசன் அன்பர் - சிவனடியார்கள்,
நெறிப்படி - வழியிலே எதிர்ப்பட்டால், சிறார்மேல்வைத்த பொச்சம் இல்
அன்பும் - தங்களிளம் புதல்வர்களிடம் வைத்திருக்கும் மெய்யன்பும், மன்னர்
புதல்வரைக் கண்டால் அன்ன அச்சமும் கொண்டு - அரசிளங்குமரரைக்
கண்டாலொத்த பயமும் கொண்டு, கூசி அடிபணிந்து - ஒடுங்கி அடிவணங்கி,
இனிய கூறி - இன் மொழிகள் கூறி, இச்சை ஆறு ஒழுகி - (அவர்கள்)
விருப்பின்படி நடந்து, உள்ளக் குறிப்பு அறிந்து ஏவல் செய்வார் - உள்ளக்
குறிப்பினை உணர்ந்து பணி செய்வார் எ - று.