திசை பரவிய தமிழ்
பயில் அரசர்கள் - மண்ணுலகுடன் எட்டுத்
திக்குகளினும் புகழ் பரவிய தமிழ் பயிலும் மன்னர்களாகிய சோழ சேர
பாண்டியர்கள், குழுமி - தம்முட்கூடி, சீரொடு பல திருவொடு வரு செயல்
அனையது - சிறப்போடும் பல செல்வங்களோடும் வருகின்ற
செயலினையொத்திருந்தது எ - று.
ஆர்,
பனை, நிம்பம் என்பன முறையே சோழ சேர பாண்டியர்க்குக்
கண்ணியும்; புலி, சிலை, கயல் என்பன கொடியுமாகலின் நதி அவற்றை
அடித்துக் கொண்டு வருதல் அம் மூவேந்தரும் சேனையோடு வருதல்
போலுமென்க. அரம் நிகர் இலை - வாளரத்தின் வாயை நிகர்த்த இலை;
"அரவாய் வேம்பி
னங்குழைத் தெரியலும்" |
என்பது பொருநராற்றுப்படை.
தழுவா, செய்யா என்னும் வாய்பாட்டெச்சம்;
வருதல் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. புகழ் பரவியவென்க; பரவிய -
போற்றிய என்னலுமாம்; தமிழ், புவி முழுதும் பரவியிருந்தென வரலாறு
கூறிற்றுமாம். தமிழ் - தமிழ் நாடென்னலும் பொருந்தும். ஒடுக்களில்
உம்மையில் வழி விரிக்க. (21)
[கலிநிலைத்துறை]
|
கல்லார்
கவிபோற் கலங்கிக்கலை மாண்ட கேள்வி
வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்
செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்
தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள விறுத்த தன்றே. |
(இ
- ள்.) கல்லார் கவிபோல் கலங்கி - (நூல்களை முறையே)
கல்லாதவர் இயற்றிய கவி (தெளிவின்றிக் கலங்கி நிற்றல் போல முதலிற்)
கலங்கி, கலைமாண்ட கேள்வி வல்லார் கவிபோல் - கலைகளில்
மாட்சிமைப்பட்ட கேள்வி வல்லுநர் இயற்றிய செய்யுள் (பல சிறந்த
அகப்புறத்துறைகள் பொருந்தப் பெற்றுச் செல்லுந் துறை தோறும் நுண்
பொருளுடைத்தாய்த் தெளிந்து அனைவரும் விரும்பி அற முதலிய பயன்
கொள்ளத் தங்கியது) போல, பல வான் துறை தோன்ற வாய்த்து - பலவாகிய
பெரிய நீர்த்துறையை பலவிடங்களிலும் காணப் பொருந்தி, செல் ஆறு
தோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து - செல்லுமிடந்தோறும் மணி பொன்
முதலிய பொருள்களையுடையதாய் ஆழமுடைத்தாகிப் (பின்) தெளிவடைந்து,
தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள - தேயத்திலுள்ள அனைவரும்
விரும்பிப் பயனைப் பெறுமாறு, இறுத்தது - நிலைபெற்றது (அந்நதி) எ - று.
'கல்லார்
கவிபோற் கலங்கி' என்பது இராமாயணத்தில்
வரும் "புன்கவி
யெனத் தெளிவின்றி" என்னுந் தொடருடன் ஒத்துளது. 'பலவான்
துறை...............பயன் கொள்ள' என்பது வல்லார் செய்யுளுக்கும் யாற்றுக்கும்
பொது. செய்யுளுக்குச் செல்லாறு தோறும் பொருளாழ்தலாவது ஆராயுந்
தோறும் வெளிப்படும் நுண் பொருளுடைத்தாதல்; புலவன் கருதியவற்றின்
மேலும் நோக்குடைத் தாதலுமாம். அன்று, ஏ : அசை. (22)
|