I


எழுகடலழைத்த படலம்495



வேதமுனி கோதமனுந் தலைப்பட்டு மீள்வானோர்
போதளவில் கற்புடைய பொன்மாலை மனைபுகுந்தான்
மாதவளும் வரவேற்று முகமனுரை வழங்கிப்பொன்
ஆதனமிட் டஞ்சலிசெய் தரியதவத் திறங்கேட்பாள்.

     (இ - ள்.) வேதமுனி கோதமனும் தலைப்பட்டு மீள்வான் -
வேதங்களையுணர்ந்த முனிவனாகிய கோதமனும் சந்தித்துத் திரும்புகின்றவன்,
ஓர் போது - ஒரு நாள், அளவு இல் கற்பு உடைய பொன் மாலை மனை
புகுந்தான் - அளவில்லாத கற்பினையுடைய காஞ்சனமாலை மனையின்கட்
சென்றான்; மாது அவளும் வரவு ஏற்று - அக்காஞ்சன மாலையும் அவன்
வருகையை எதிர் கொண்டு, முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம்
இட்டு - உபசார மொழிகள் கூறிப் பொற்றவிசிட்டு (இருத்தி), அஞ்சலி
செய்து - வணங்கி, அரிய தவத்திறம் கேட்பாள் - அரிய தவத்தின்
பாகுபாடுகளைக் கேட்கின்றவள் எ - று.

     தவத்திறங் கேட்டல் - தவத்தின் வகைகளைக் கூறக் கேட்டல். (3)

கள்ளவினைப் பொறிகடந்து கரைகடந்த மறைச்சென்னி
உள்ளபொருள் பரசிவமென் றுணர்ந்தபெருந் தகையடிகேள்
தள்ளரிய பவமகற்றுந் தவமருள்செ யெனக்கருணை
வெள்ளமென முகமலர்ந்து முனிவேந்தன் விளம்புமால்.

     (இ - ள்.) கள்ளவினைப் பொறி கடந்து - வஞ்ச வினைகளையுடைய
ஐம்பொறிகளைக் கடந்து, கரைகடந்த மறைச் சென்னி உள்ள பொருள் -
அளவு கடந்த மறை முடிவில் உள்ள பொருள், பரசிவம் என்று உணர்ந்த
பெருந்தகை அடிகேள் - பரசிவமே என்று தெளிந்த பெரிய தகுதியையுடைய
அடிகளே, தள் அரிய பவம் அகற்றும் தவம் அருள் செய் என -
நீக்குதற்கரிய பிறப்பினை நீக்கும் வலியினையுடைய தவத்தினைக் கூறியருள்க
என்று கேட்ப, கருணை வெள்ளம் என முக மலர்ந்து - கருணை வெள்ளம்
போல முகமலர்ச்சியுடையவனாய், முனிவேந்தன் விளம்பும் - முனி
மன்னனாகிய கோதமன் கூறுகின்றான் எ - று.

     ஐம்பொறிகளின் வஞ்சத்தை "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்து" என வாதவூரடிகள் கூறுதலுங் காண்க. பொறி கடத்தல் -
பொறியை வென்று அடக்குதல். அடிகேள் அருள் செய் என்றது பன்மை
யொருமை மயக்கம். ஆல் : அசை. (4)

தவவலியா லுலகீன்ற தடாதகைக்குத் தாயானாய்
சிவபெருமான் மருகனெனுஞ் சீர்பெற்றாய் திறன்மலயத்
துவசனருங் கற்புடையாய் நீயறியாத் தொல்விரதம்
அவனியிடத் தெவரறிவா ரானாலு மியம்பக்கேள்.

     (இ - ள்.) திறல் மலயத்துவசன் அரு கற்புடையாய் - வெற்றி
பொருந்திய மலயத்துவச பாண்டியனுக்கு வாழ்க்கைத் துணையாகிய அரிய
கற்பினையுடைய பொன்மாலையே, தவ வலியால் உலகு ஈன்ற தடாதகைக்குத்
தாய் ஆனாய் - (நீ முன் செய்த) தவத்தின் வலிமையால் உலகங்களை