I


மலயத்துவசனை யழைத்த படலம்503



கையும், காதலன் கைத்தலம் - புதல்வன் கையும், அன்றி - அல்லாமல்,
கன்றின்வால் - ஆனினது கன்றின் வாலும் ஆகிய, இம்மூன்றில் ஒன்று
ஆதல் - மூன்றனுள் ஒன்றினையாவது, அங்கை பற்றியே - அழகிய
கையாற்பிடித்துக் கொண்டே, ஓத நீர் ஆடுதல் மரபு என்று ஓதினார் -
கடல் நீர் ஆடுதல் விதி என்று கூறினார்.

     கொழுநன் கைத்தலமே சிறந்த தென்பார் ஒன்றாதல் என்றார்.
அங்கை - அகங்கையுமாம் பற்றியே என்பதன் ஏகாரம் தேற்றம். (6)

மறையவர் வாய்மைபொன் மாலை கேட்டுமேற்
குறைவறத் தவஞ்செயாக் கொடிய பாவியேற்*
கிறைவனுஞ் சிறுவனு மில்லை யேயினிப்
பெறுவது கன்றலாற் பிறிதுண் டாகுமோ.

     (இ - ள்.) மறையவர் வாய்மை - அந்தணரது மெய்ம்மொழியை,
பொன்மாலை கேட்டு - காஞ்சனமாலை கேட்டு, மேல் குறைவு அறத்தவம்
செயாக் கொடிய பாவியேற்கு - முற்பிறப்பில் குறைவின்றித் தவஞ் செய்யாத
கொடிய பாவியாகிய எனக்கு, இறைவனும் சிறுவனும் இல்லையே - நாயகனும்
புதல்வனும் இல்லையே, இனிப்பெறுவது கன்று அலால் பிறிது உண்டாகுமோ
- இனி யான் பெறுவது கன்றின் வாலல்லாமல் வேறுளதோ எ - று.

     பிராட்டியாரைப் பெறும் தவஞ்செய்திருந்தும் இன்று இறைவனும்
சிறுவனும் இல்லாத குறையை நோக்கிக் ‘குறைவறத் தவஞ் செயா’ என்றார்.
உண்டாகுமோ - உளதேமா என்னும் பொருட்டு. ஏகாரம் இரக்கத்திலும்,
ஓகாரம் எதிர்மறையிலும் வந்தன. (7)

ஆதலாற் கன்றின்வால் பற்றி யாடுகோ
மாதரா யென்றுதன் மகட்குக் கூறலும்
வேதன்மால் பதவியும் வேண்டி னார்க்கருள்
நாதனா ருயிர்த்துணை யாய நாயகி.

     (இ - ள்.) ஆதலால் - ஆகையால், மாதராய் - மடந்தையே, கன்றின்
வால் பற்றி ஆடுகோ - கன்றினது வாலைப்பற்றியே நீராடு வேனோ, என்று
தன் மகட்குக் கூறலும் - என்று தன் புதல்வியாருக்குச் சொல்லியவளவில்,
வேதன் மால் பதவியும் - பிரமன் பதவியையும் திருமால் பதவியையும்,
வேண்டினார்க்கு அருள் - விரும்பி வழிபட்டவருக்கு அளித்தருளும்,
நாதனார் உயிர்துணையாய நாயகி - தலைவராகிய சிவபெருமானுக்கு உயிர்த்
துனையாகிய பிராட்டியார் எ - று.

     உலக நாயகியாகிய நின்னை மகளாகவும், சிவபரஞ்சுடரை
மருகனாகவும் பெற்று வைத்தும் கன்றின்வால் பற்றி ஆடுதல் முறையோ
என்பாள் ‘ஆடுகோ’ என்றாள்; ஓகாரத்தை அசையாக்கி, ஆடுவேன் என்று
பொருளுரைத்தலுமாம். ஆடுகு : தன்மை யொருமை யெதிர் கால முற்று. (8)


     (பா - ம்.) * பாவியெற்கு.