என்னும் நாடுகாண்காதை
யடிக்கு "காவிரிநீர் கங்கைநீராதலிற் கங்கைப்
புதல்வரைக் காவிரிப் புதல்வ ரென்றார்" என அடியார்க்குநல்லார்
கூறிய
விளக்கத்தானு மறிக; உழவிற்கு இன்றியமையாத நீரினை ஆளுதலுடையா
ரென்பதுபற்றி அங்ஙனம் வழங்கப்பட்டா ராதல் வேண்டும்; காரள
ரென்பதுங் காண்க. மூவராவார் : அந்தணர், அரசர், வணிகர் என்போர்.
ஆரிய நால்வருணத்திற் சேர்ந்த சூத்திரர் நிலமையும், தமிழ் வேளாளர்
நிலைமையும் வெவ்வேறாமென்றும், பின்னுளோர் இருதிறத்தாரையும் ஒப்பக்
கருதி வேளாளர்க்கு வழிபாடு கூறிவிட்டன ரென்றும் சில அறிஞர்
கருதுகின்றனர்; திருக்குறள் முதலிய பழந்தமிழ்
நூல்களில் உழவுத் தொழில்
உயர்ந்ததாகப் பாராட்டப்படுதலும் நோக்குக. 'மன்னர் பாங்கிற் பின்னோ
ராகுப' என்னும் அகத்திணையியற் சூத்திரமும்,
'அறுவகைப்பட்ட' என்னும்
புறத்தினையியற் சூத்திரமும், 'வேளாண் மாந்தர்க்கு'
'வேந்து விடு
தொழிலில்' என்னும் மரபியற் சூத்திரங்களும்,
அவற்றினுரைகளும் நோக்கி
வேளாளர்க்குரிய தொழில்கள் இன்னவென அறிக. 'மன்னர் பாங்கின்'
என்னுஞ் சூத்திரவுரையில், வேளாளரை உழுவித் துண்போர், உழுதுண்போர்
எனப் பிரித்து முதல்வருடைய பெருமைகளை விரித்துக் காட்டியுள்ளார்
நச்சினார்க்கினியர். (54)
வருவிருந்
தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை
அருகிருந் தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை
உரைபெறு தமிழ்பா ராட்டு மோசைகேட் டுவகை துள்ள
அருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு மோசை.* |
(இ
- ள்.) வருவிருந்து - வருகின்ற விருந்தினரை, எதிர்கொண்டு
ஏற்று - (இன்முகத்தோடு) எதிர்சென்று அழைத்து வந்து, நயன்உரை
வழங்கும் ஓசை - இன்னுரை கூறும் ஒலியும், அருகு இருந்து -
பக்கத்திலிருந்து, அடிசில் ஊட்டி - அறுசுவை உணவுகளையும் உண்பித்து,
நன்கு முகமன் அறையும் ஓசை - குறைவற உபசாரங் கூறும் ஒலியும்,
உரைபெறு தமிழ் - புகழ் அமைந்த தமிழ்ப்பாக்களை (அவற்றின் சொற்
சுவை பொருட்சுவை உணர்ந்து), பாராட்டும் ஓசை - பாராட்டு
வதனாலுண்டாகும் ஒலியும், கேட்டு - (அவ்வாறு உணர்ந்து பாராட்டும்
புலவர்கள் கூறுவதைக்) கேட்டு, உவகை துள்ள - மகிழ்ச்சி மீதூர, இரு
நிதி அளிக்கும் ஓசை - (அவருக்குப்) பெரும் பொருளைக்
கொடுத்தலாலுண்டாகும் ஒலியும் (ஆகிய இசை), எழுகடல் அடைக்கும்
ஓசை - ஏழுகடல்களின் ஒலிகளையும் கீழ்ப்படுத்தும் ஒலிகளாம் எ - று.
"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு" |
என்பவாகலின் ஈண்டு
விருந்தோம்பலை முதற்கண் எடுத்தியம்பினார்.
'சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்
சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றாலும என விருந்தோம்பு
வார்க்கு இன்றியமையாத மூன்று' எனப் பரிமேலழகர் கூறிய உரை இங்கே
சிந்திக்கற்பாலது. தமிழ் பாராட்டும் ஓசையைக் கேட்டு என்றுரைப்பாரு
முளர். கடல் அதன் ஓசைக்காயிற்று. (55)
(பா
- ம்.) * எழுகட லடக்குமோசை.
|