"நெல்லு முயிரன்றே
நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுபி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே" |
என்னும் புறப்பாட்டு
இங்கு நோக்கற் பாலது. முறையாவது இஃதென்பதனை,
"ஓர்ந்துகண்
ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை" |
என்னும்
திருக்குறளா னறிக. (2)
கரியவன் கமலச் செம்மன் மறைமுதற் கலைகள் காண்டற்
கரியவ னன்பர்க் கென்று மெளியவ னாகு மேன்மை
தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் றனக்குங் கற்பிற்
குரியவ டனக்குங் காதன் மகளென வுமையைத் தந்தான். |
(இ
- ள்.) கரியவன் கமலச் செம்மல் மறை முதல் கலைகள் காண்டற்கு அரியவன்
- திருமாலும் தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் வேதம் முதலிய
கலைகளும் காணுதற்கு அரியவனும், என்றும் அன்பர்க்கு எளியவன் ஆகும்
மேன்மை - எஞ்ஞான்றும் அன்பர்களுக்கு எளியவனுமாகிய (தனது)
பெருமையை, தெரிய - அனைவரும் அறியுமாறு, அன்பு அகன்று சிந்தை
தென்னவன் தனக்கும் - அன்பு பெருகிய உள்ளத்தினை யுடைய மலயத்துவச
பாண்டியனுக்கும், கற்பிற்கு உரியவள் தனக்கும் - அவன் கற்பினுக்கு
மனைவியாகிய காஞ்சன மாலைக்கும், உமையை மகள் எனத் தந்தான் -
உமாதேவியைப் புதல்வியாகுமாறு அருளினான் எ - று.
இறைவன்
இங்ஙனம் அரியனும் எளியனுமாம் தன்மையை,
"மூவராலு மறியொ
ணாமுத லாய தானந்த மூர்த்தியான்
யாவராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான்" |
என்னும் திருவாசகத்தாலும்
அறிக.
"தன்னடியார்க்,
கென்று மெளிவரும் பெருமை
யேழுலகு மெடுத்தேத்தும்" |
எனத் திருத்தொண்டர்
புராணங் கூறுவதும் ஈண்டுச் சிந்திக்கற் பாலது.
அரியனாகியும் என விரித்தலுமாம். அகன்ற - விரிந்த, "அஃகி யகன்ற வறிவு"
என்புழப் போல. (3)
மற்றதற் கிசையத் தானு மருமக னாகி வையம்
முற்றும்வெண் குடைக்கீழ் வைக முறைசெய்தா னாக மூன்று
கொற்றவர் தம்மிற் றிங்கட் கோக்குடி விழுப்ப மெய்தப்
பெற்றது போலு மின்னும் பெறுவதோர் குறைவு தீர்ப்பான். |
|