I


உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம்529



முடியும்; அழய வெனத் திரித்தலுமாம். மேல் ‘இந்திரன் மேருப்புத்தேள்
புனலிறைக் கிடத்தோ ளாட’ என்றதன் உரையை நோக்குக. வருமன் ஆகும்
என விரிக்க. (26)

நாலாகு மதியிற் சந்தி மிதிப்பது நடாத்தி யாறாம்
பாலாகு மதியி லன்ன மங்கலம் பயிற்றி யாண்டின்
மேலாகு மதியிற் கேச வினைமுடித் தைந்தா மாண்டில்
நூலாறு தெரிந்து பூண நூற்*கடி முடித்துப் பின்னர்.

     (இ - ள்.) நால் ஆகும் மதியில் சந்தி மிதிப்பது நடாத்தி - நான் காந்
திங்களில் சந்தி மிதித்தலாகிய சடங்கினை முடித்து, ஆறாம் பால் ஆகும்
மதியில் - ஆறாம் பகுதியாகிய திங்களில், அன்ன மங்கலம் பயிற்றி - சோறு
ஊட்டலாகிய விழாவை நடாத்தி, ஆண்டின் மேல் ஆகும் மதியில் - ஓர்
ஆண்டின் மேலாகிய திங்களில், கேசவினை முடித்து - மயிர் வினையை
முடித்து, ஐந்தாம் ஆண்டில் ஐந்தாவது ஆண்டில், நூல் ஆறு தெரிந்து பூண
நூல் கடி முடித்து - மறை நெறி யுணர்ந்து (அவ்வழியே) பூண நூல் விழாவை
முடித்து, பின்னர் - பின்பு எ - று.

     ஆண்டின் மேலாகு மதி - பதின் மூன்றாந் திங்கள். சந்தி மிதித்தல்,
அன்ன மங்கலம், கேச வினை, பூண நூங்ற கடி இவற்றை முறையே
பிரவேசம், அன்னப்பிரசனம், சௌளம், உபநயனம் என வடமொழியிற்
கூறுவர். (27)

பதநிரை பாழி சாகை யாரணம் பணைத்த வேதம்
முதனிரைக் கலையும் வென்றி மூரிவிற் கலையும் வாளும்
மதநிரை யொழுகு மையன் மாநிரை வையம் பாய்மா
விதநிரை யேற்ற மற்று முணர்த்தினான் வியாழப் புத்தேள்.

     (இ - ள்.) பதம் நிரை பாழி சாகை ஆரணம் பணைத்த - பத
வொழுங்கும் பாழியும் சாகையும் ஆரணமும் நிரம்பிய, வேதம் முதல்
நிரைகலையும் - மறைகள் முதலாக வரிசைப்பட்ட கலைகளையும், வென்றி
மூரிவில் கலையும் - வெற்றியைத் தரும் வலிய வீற்றொழிலுக்குரிய
கலையையும், வாளும் - வாட்பயிற்சியையம், மதம் நிரை ஒழுகும் மையல்மா
ஏற்றம் - தொடர்ந்து மதநீர் ஒழுகும் மயக்கத்தையுடைய யானையின்
ஏற்றத்தையும், நிரைவையம் ஏற்றம் - வரிசைப்பட்ட தேரின் ஏற்றத்தையும்,
விதம் நிரை பாய்மா ஏற்றம் - பலவகைப் பட்ட வரிசையாகிய குதிரையின்
ஏற்றத்தையும், மற்றும் - பிறவற்றையும், வியாழப் புத்தேள் உணர்த்தினான் -
வியாழ பகவான் உணர்த்தினான் எ - று.

     பாழி - பதங்களை உச்சரிக்கும் முறையாகிய கனமும் சடையும். சாகை
- கிளை. ஆரணம் - வேதத்தின் பகுதியாகிய பிராம்மணத்தின் ஒரு பகுதி;
இச் சொல் ஆரண்யகம் என்பதன் திரிபென்றும், இப் பகுதி வனத்திற்
சொல்லப் பட்டமையால் இப்பெயர் பெற்றதென்றும் கூறுப. பணைத்த - மிக்க.
விற் கலை - வில் வேதம். வாள் ஏனைய படைகட்கும் உபலக்கணம். ஏற்ற
மெனபதனை மையன்மா, வையம் என்பவற்றோடும் ஒட்டுக. (28)


     (பா - ம்.) *பூணனூல்.