(இ
- ள்.) மேதி - எருமைகள், கன்றொடும் களிவண்டு - தன்
கன்றுகளும் களித்த வண்டுகளும், வாய் நக்க - கடைவாயை நக்கும் படி,
ஈர் கரும்பு மென்று - குளிர்ந்த கரும்புகளைக் குதட்டி, பொன் சொரி
வேங்கைவாய் உறங்குவ - பொன்போலும் பூக்களை உதிர்க்கின்ற வேங்கை
மர நிழலில் தூங்குவன; முறச்செவிமா - முறம் போலும் செவிகளையுடைய
யானைகள், குன்று இளம் தினை மேய்ந்து - குறிஞ்சி நிலத்திலுள்ள முதிராத
தினைக் கதிர்களைத் தின்று, பூ மருதம் - பூக்கள் நிறைந்த மருதமரத்தின்,
கொழுநிழல் - கொழுவிய நிழலிலே, சென்று - போய், சேவகம் என
உறங்குவ - (தாம்) துயிலுமிடமாகக் கருதி உறங்குவன எ - று.
பொன்
போலும் பூக்களைப் பொன்னென்றார்; முறியிணர்க் கொன்றை
நன்பொன் கால என்புழிப் போல. சேவகம் - யானை துயிலிடம். கரும்பு,
மருதம், மேதி மருதத்திற்கும்; தினை, வேங்கை, யானை குறிஞ்சிக்கும்
உரியன. குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் மயக்கங் கூறியவாறு. உறங்குவ :
பலவின்பால் முற்று. (36)
எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றிய ரிழைத்த
சிற்றில் வாய்நுழைந் தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு
பற்றி லாரெனச் சிதறிய மனவணி பரதர்
முற்றி லாமுலைச் சிறுமியர் முத்தொடுங் கோப்ப. |
(இ
- ள்.) எற்று தெள்திரை - மோதும் தெள்ளிய அலைகள்,
எறிவளை, வீசிய சங்குகள், எயிற்றியர் இழைத்த சிற்றில்வாய் - வேடச்
சிறுமிகள் கோலிய சிறு வீட்டின்கண், நுழைந்து அழிப்ப - புகுந்து அழிக்க,
அச்சிறுமியர் வெகுண்டு - அப்பெண்கள் சினந்து, பற்று இலார் என -
பற்றற்றாரைப்போல, சிதறிய மனவு அணி - கழற்றி யெறிந்த அக்குமணி
அணிகளை, பரதர் - நுளையருடைய, முற்றிலா முலைச் சிறுமியர் - முதிராத
கொங்கையையுடைய சிறுமிகள், முத்தொடும் கோப்ப - முத்துக்களோடுங்
கோவை செய்வர் எ - று.
மனவு
குறிஞ்சிக்குரியது. பரதர் - நெய்தற்றினை மக்கள். குறிஞ்சிக்கும்
நெய்தலுக்கும் மயக்கங் கூறியவாறு. அழிப்ப : செயவெனெச்சம். கோப்ப :
பலர்பால் முற்று. (37)
முல்லை வண்டுபோய் முல்லையாழ முளரிவாய் மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றின்பின் பயில்வன மருதங்
கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென் றிரங்கி
ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை. |
(இ
- ள்.) முல்லை வண்டு போய் - முல்லை நிலத்துள்ள வண்டுகள்
சென்று, முல்லை யாழ் - (தாம்வல்ல) முல்லைப்பண்ணை, முளரிவாய் மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றி - தாமரைப் பூவிலுள்ள மருதப்பண்வல்ல
வண்டுகளைப் பயில்வித்து, பின் மருதம் பயில்வன - பின் மருதப்
பண்ணைத் தாம் கற்பன; வாளை - வாளை மீன்கள், கொல்லை ஆன்மடி -
முல்லை நிலத்திலுள்ள பசுவின் மடியில், எறிந்து - முட்டி, இளம் குழவி
என்று இரங்கி - (அப்பசு தனது) இளமையாகிய கன்று முட்டியதென்று
|