I


530திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



குருமுகத் தறிய வேண்டு மென்பதோர் கொள்கை யாலே
ஒருமுறை கேட்டாங் கெண்ணெண் கலைகளு மொருங்கு                                         தேறி
அரனல தொருவ ராலுந் தேற்றுவ தருமை யாலப்
பரனிடைத் தெளிந்தான் பாசு பதாத்திரப் படையு மன்னோ.

     (இ - ள்.) குருமுகத்து அறியவேண்டும் என்பது ஓர் கொள்கையாலே
- (நூல்களை) ஆசான் வாயிலாக அறிந்து கொள்ளல் வேண்டு மென்னும் ஒரு
கோட்பாட்டினால், ஒரு முறை கேட்டு ஆங்கு - ஒரு முறை கேட்டு
அவ்வளவிலே, எண்ணென் கலைகளும் ஒருங்கு தேறி - அறுபத்து நான்கு
கலைகளையும் ஒருசேரத் தெளிந்து, அரன் அலது ஒருவராலும் தேற்றுவது
அருமையால், சிவபெருமான் அல்லது வேறு யாவராலும் அறிவிப்பதற்கு
அருமையால், அப்பரனிடை பாசுபதாத்திரப்படையும் தெளிந்தான் -
அம்முதல்வனிடத்துப் பாசுபதப் படைப் பயிற்சியையும் உணர்ந்தான் எ - று.

     முகம் - வாயில்; வழி. மெய்ந்நூற் பொருள்களைத் தாமாக அறிய
லுறின் பொருளல்லவற்றைப் பொருளெனத் திரிய வுணர்ந்து ஐயுற்றும்
இடர்ப்படல் கூடுமாகலின் குரு முகமாக அறியவேண்டுமென்பது ஒரு
கொள்கையாயிற்று. குருவாவான் அஞ்ஞானத்தை நீக்கி மெய்யஞ்ஞானத்தை
உதிப்பிக்கவல்லான். குரு என்பது வியாழனுக்குச் விறப்புப் பெயராகியதொரு
நயமும் உணரற்பாலது. இயற்கையாகவே எல்லா முணர்ந்த குருபரனாகிய
குமரவேளுக்குப் பிறர்பால் ஓதி யுணர்வ தொன்றில்லையேனும்
ஆன்றோரொழுக்கத்தைப் பாதுகாத்தலாகிய கடனை உலகினர்க்கு
அறிவுறுத்தற்பொருட்டு ஒரு முறை கேட்டான் என்க. அலது, அன்றியென்னும்
பொருட்டு. பாசுபதம் - பசுபதியாகிய சிவனுக்குரியது. மன்னும் ஓவும்
அசைகள். (29)

எல்லையில் கலைக ளெல்லா மகவைநா லிரண்டின் முற்றத்
தொல்லறி வுடையா னாகிக் குரவரைத் தொழுது போற்ற
வல்லவ னாகி யன்னார் மகிழ்ச்சிகொள் கலனாய் வென்றிச்
செல்வவேற் றிளைஞ ரோடுந் திருவிளை யாடல் செய்வான்.

     (இ - ள்.) எல்லை இல் கலைகள் எல்லாம் அகவை நாலிரண்டில்
முற்ற - அளவிறந்த கலைகள் அனைத்தும் எட்டுவயதிலே நிரம்ப, தொல்
அறிவு உடையான் ஆகி - பழைய முற்றுணர்புடையவனாகியும், குரவரைத்
தொழுது போற்ற வல்லவனாகி - இரு முதுகுரவரையும் வணங்கி வாழ்த்த
வல்லுநனாகியும், அன்னார் மகிழச்சி கொள் கலனாய் - அவர்கள்
மகிழ்ச்சிகொள்ளும் பாத்திரமாகியும், வென்றிச் செல்வ ஏறு இளைஞரோடும்
திருவிளையாடல் செய்வான் - வெற்றிச் செல்வத்தையுடைய ஆண் சிங்கம்
போன்ற இளைஞர்களோடும் (சென்று) திருவிளையாடல் செய்வானாயினன்
எ - று.

     தகுதியுடையானைப் பாத்திரம் என்பவாகலின் ‘கலனாய்’ என்றார்;
அணிகலாய் என்னலுமாம். "நன்கலன் நன்மக்கட் பேறு" என்பதும் நோக்குக.
வென்றியையும் செல்வத்தையுமுடைய என்றும், வேற்றிளைஞரோடும் என்றும்
கூறலுமாகும். (30)