புகர்மத வேழ முட்டிப்* போர்விளை யாடி வென்றுந்
தகரொடு தகரைத் தாக்கித் தருக்கம ராடி வென்றும்
வகிர்படு குருதிச் சூட்டு வாரண மாடி வென்றுந்
நகைமணிப் பலகை செம்பொ னான்குறுப் பாடி வென்றும். |
(இ
- ள்.) புகர் மத வேழம் முட்டிப் போர்விளையாடிவென்றும் -
புள்ளிகளையுடைய முகத்தையும் மதத்தையுமுடைய யானைகளைப் பொருத்திப்
போர்செய்வித்து வெற்றி பெற்றும், தகரொடு தகரைத் தாக்கி தருக்கு அமர்
ஆடிவென்றும் - ஆட்டுக் கிடாய்களோடு ஆட்டுக் கிடாய்களைப் பொருத்திச் செருக்குடன்
போர்புரிவித்து வெற்றி யடைந்தும், வகிர்படு குருதிச் சூட்டு
வாரணம் ஆடிவென்றும் - பிளவுபட்ட உதிரம்போலும் செந்நிறம் வாய்ந்த
உச்சிக் கொண்டையையுடைய சேவல்களைப் போர் செய்வித்து வெற்றி
பெற்றும், நகைமணிப் பலகை - ஒளியினையுடைய மணிகள் அழுத்திய பலகை
வரையிலுள்ள, செம்பொன் நான்கு உறுப்பு ஆடி வென்றும் - சிவந்த
பொன்னாற் செய்த தேரும் யானையும் குதிரையும் காலாளுமாகிய நான்கு
உறுப்புக்களாற் பொருது வெற்றியடைந்தும் எ - று.
ஆடுவித்தலை
ஆடியென்றார்; அவற்றின் வெற்றியும் தோல்வியும்
செய்விப்போர் மேலவாகலின். முட்டுவித்து தாக்குவித்து என்பன, முட்டி
தாக்கியென நின்றன. வாரணமென்னும் பலபொருளொரு சொல் குருதிச் சூட்டு
என்னுங் குறிப்பால் சேவலையுணர்த்திற்று. நான்குறுப்பு - சதுரங்கம்.(31)
காற்றினுங் கடிய மாவிற் காவதம் பலபோய் மீண்டும்
கூற்றினுங் கொடிய சீற்றக் குஞ்சர முகைத்தும் வையை
யாற்றினுய் யானத் தாவி யகத்தினு ளின்பந் துய்த்தும்
வேற்றிறன் மைந்த ரோடு மல்லமர் விளைத்து வென்றும். |
(இ
- ள்.) காற்றினும் கடியமாவில் காவதம் பலபோய் மீண்டும் -
காற்றைக் காட்டினும் விரைந்து செலவினையுடைய குதிரையிலேறிப் பலகாத
வழி சென்று திரும்பியும், கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் -
கூற்றுவனிலும் கொடிய சினத்தையுடைய யானையைச் செலுத்தியும்,
வையையாற்றின் உய்யானத்து ஆவி அகத்தினுள் இன்பம் துய்த்தும் -
வையை நதியிலும் பூங்காவிலும் பொய்கையிடத்தும் இன்பம் நுகர்ந்தும், வேல்
திறல் மைந்தரோடு மல் அமர் விளைத்து வென்றும் - வேற்படையையுடைய
வலிய இளைஞர்களோடு மற்போர் புரிந்து வெற்றி பெற்றும் எ - று.
ஆவி
- பொய்கை; இயந்திரவாவியுமாம். யாற்றிலும் பொய் கையிலும்
நீராடல் முதலியவற்றாலும், உய்யானத்தில் மலர் கொய்தல் முதலியவற்றாலும்
இன்பந் துய்த்தென்க; உருபும் - உம்மையும் விரிக்க. அகத்தினுள், இன் :
சாரியை. (32)
(பா
- ம்.) * மூட்டிப்.
|