பங்கயச் செவ்வித் தாகிக் கண்மனம் பருகு காந்தி
அங்கழற் காலுஞ் சொன்ன வடைவினிற் றிரண்டு நீண்ட
சங்கையும் வட்டந் தோன்றாச் செழுமுழந் தாளு நால்வாய்த்
துங்கவீர்ங் கவுண்மால் யானைத் துதிக்கைபோற் றிரள்க வானும். |
(இ
- ள்.) பங்கயச் செவ்வித்து ஆகி - தாமரை மலர்போலும்
அழகினையுடையதாய், கண் மனம் பருகு காந்தி அம் கழல் காலும் -
(கண்டவர்) கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒளியையுடைய
அழகிய வீரகண்டையணிந்த அடியையும், சொன்ன அடைவினில் திரண்டு
நீண்ட சங்கையும் - (உறுப்பிலக்கண நூலில்) சுறிய முறைப்படி திரண்டு
நீண்ட கணைக்காலையும், வட்டம் தோன்றாச் செழு முழம் தாளும் - எம்பின்
வட்டவடிவு தோன்றாது தசைந்த முழங்காலையும், நால்வாய் - தொங்கிய
வாயும், துங்க ஈர்ங்கவுள் - உயர்ந்த குளிர்ந்த கபோலமும் உடைய,
மால்யானைத் துதிக்கை போல் - மதமயக்கத்தையுடைய யானையின்
துதிக்கைபோல, திரள் காவனும் - திரண்ட தொடையையும் எ - று.
சங்கை
- கணைக்கால்; இது சங்கு எனவும் படும். ஈர்ங்கவுள் -
மதத்தால் நனைந்த ஈரிய கவுள். (35)
சிறுகிய வயிறுந் தாழ்ந்த நாபியுஞ் செவ்வி நோக்கும்
மறுவில்கண் ணடியி னன்ன கடியகல் வரைகொண் மார்பும்
எறியிசை வீணைத் தண்டி னிணைந்துநீண் டிழிந்த கையும்
வெறியதார் கிடந்த மேரு வெற்பிரண் டனைய தோளும். |
(இ
- ள்.) சிறுகிய வயிறும் - சிறுத்த வயிற்றினையும், தாழ்ந்த நாபியும்
- ஆழ்ந்த உந்தியையும், செவ்வி நோக்கும் - அழகைப் பார்த்தற்குக்
கருவியாகிய, மறு இல் கண்ணடியின் அன்ன - குற்றமில்லாத கண்ணாடியை
ணத்த, கடி - விளக்கத்தையுடைய, வரைகொள் அகல் மார்பும் - மூன்று
வரிகளைக் கொண்ட அகன்ற மார்பினையும், எறி இசை வீணைத் தண்டின் -
வருடுதலால் இசை எழுகின்ற வீணையினது கோல்போல, இணைந்து நீண்டு
இழிந்த கையும் - தம்மு ளொத்து நீண்டு (முழந்தாளளவும்) தாழ்ந்த
கைகளையும், வெறிய தார்கிடந்த - மணத்தினையுடைய மாலைதஙகிய,
மேருவெற்பு இரண்டு அனைய தோளும் - இரண்டு மேருமலையை ஒத்த
தோள்களையும் எ - று.
கண்ணடியின்,
இன் : சாரியை. வரை - மார்பின்கண்ணுள்ள உத்தம
விலக்கணமாகிய மூன்று வரிகள்;
"ஆரந் தாழ்ந்த
வம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின்" |
என்று திருமுருகாற்றுப்படையிலும்,
"வரையகன் மார்பிடை
வரியு மூன்றுள" |
என்று சிந்தாமணியிலும்
கூறப்படுதல் காண்க; மலையையொத்த என்றுமாம்.
வெறி - மணம்; குறிப்புப் பெயரெச்சம். (36)
|