I


536திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே ஆசிரியற்க
மெல்லெழுத்து மிகுத லாவயி னான"

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். சேந்த, சிவந்த என்பதன் மரூஉ.
வலிக்குத் திட்பமும், ஓசைக்குக் கம்பீரமும் ஆழமாமென்க. (41)

எல்லையின் மூர்த்தி மைந்த னிலக்கண நிறைவி னோடு
நல்லவாங் குணனு நோக்கிப் பொதுவற ஞாலங் காக்க
வல்லவ னாகி வாழ்நா ணனிபெற வல்ல னென்னா
அல்லணி மிடற்றான் பின்னு மனத்தினா லளந்து சூழும்.

     (இ - ள்.) எல்லை இல் மூர்த்தி - (அளவைகளால்) அளந்தறியப்
படாத இறைவனாகிய, அல் அணி மிடற்றான் - (நஞ்சினால்) இருள் போன்ற
அழகிய திருமிடற்றையுடைய சிவபெருமான், மைந்தன் இலக்கண
நிறைவினோடு - புதல்வனுடைய நிறைந்த இலக்கணத்துடன், நல்லவாம்
குணனும் நோக்கி - நல்லனவாகிய குணங்களையும் ஆராய்ந்தறிந்து, பொது
அற ஞாலம் காக்க வல்லவனாகி - பிறர்க்குப் பொதுவின்றாக உலகத்தைப்
புரப்பதற்கு வன்மையுடையவனாகி, வாழ் நாள் நனிபெற வல்லன் என்னா -
வாழ்நாளை மிகப் பெறவும் வல்லனாவன் என்று கருதி, பின்னும் - மேலும்,
மனத்தினால் அளந்து சூழும் - மனத்தினால் அளவிட்டு ஆலோசிக்கின்றார்
எ - று.

     எல்லையில் மூர்த்தி - வரம்புபடாத வியாகபவுருவினன் என்னலுமாம்.
பெறவும் என எச்சவும்மை விரிக்க. அல்லினை அணிந்த என்றுமாம்;
அணியென்பதனை உவமவுருபாக்கலு மொன்று. (42)

இத்தகு பண்பு சான்ற நீர்மையா லிசைமை நீதி
வித்தக நல்ல வுள்ள முடைமைமெய் வீறு தெய்வ
பத்திமை யுலகுக் கெல்லா மகிழ்ச்சிசெய் பண்பு சாந்த
சித்தமெவ் வுயிர்க்கு மன்பு செய்கைநல் லீகை கல்வி.

     (இ - ள்.) இத்தகு பண்பு சான்ற நீர்மையால் - இந்தத் தகுதியான
குணங்கள் நிறைந்த இயல்பினால், இசைமை - புகழும், நீதி - நீதியும்,
வித்தகம் - சதுரப்பாடும், நல்ல உள்ளம் உடைமை - நன்மணமுடைமையும்,
மெய்வீறு தெய்வபத்திமை - மெய்மை மிக்க பரசிவ பத்தியும், உலகுக்கு
எல்லாம் மகிழ்ச்சிசெய் பண்பு - உலக முழுதுக்கும் மகிழ்ச்சி விளைக்கும்
தன்மையும், சாந்த சித்தம் - அசைவிலாத சிந்தையும், எவ்வுயிர்க்கும் அன்பு
செய்கை - எல்லா வுயிர்கள்மேலும் அருள் செய்தலும், நல் ஈகை - நல்ல
வண்மையும், கல்வி - கல்வியும் எ - று.

     நீர்மை, இசைமை, பத்திமை யென்பவற்றில் மை பகுதிப் பொருள்
விகுதி. மெய் வீறு தெய்வபததிமை - மெய்ம்மையும் பெருமையும்
தெய்வபத்தியும் என்றுரைத்தலுமாம். சாந்த சித்தம் - திரை யற்ற நீர்போல்
அமைந்த சிந்தை. அருளும் அன்பும் வேற்றுமை யின்றியும் வழங்கும். (43)