(இ
- ள்.) வான யாறு தோய்ந்து உயரிய மலயம் - ஆகாய
கங்கையை அளாவி உயர்ந்த பொதியின் மலை, முக்கண் ஞான நாயகன் -
மூன்று கண்களையுடைய ஞான முதல்வனாகிய சிவபிரானையும், அம் மலை
போர்த்த கார் - அப்பொதியின் மலையாற் போர்க்கப் பெற்ற முகில், நால்
வாய் யானை ஈர் உரி - தொங்குகின்ற வாயினையுடைய யானையினின்றும்
உரித்து (அவ்விறைவனாற் போர்க்கப் பெற்ற) தோலையும், அம்மழை அசம்பு
- அம் முகிலின் மழைத்துளிகள், அதன் புண்நீர் - அவ்வியானையுன்
குருதியையும், கூனல் வான்சிலை - (அதனிற் காணப்படும்) வளைந்த
இந்திரவில், குருதி தோய் கோடு - (அவ்வி யானையின்) உதிரந் தோய்ந்த
கொம்பினையும், போன்றன்று - ஒத்தது எ - று.
வானயாறு
தோய்தல் மலயத்திற்கும் இறைவனுக்கும் பொது.
தோய்ந்து என்பதனை மலைக்கேற்றுங்கால் தோய என்பதன் திரிபெனக்
கொள்ளலுமாம். ஏகாரமிரண்டும் அசை.
யானையுரித்த
வரலாறு : - யானையுருவினையுடைய கயாசுரன்
என்பவன் பிரமனைக்குறித்து அருந்தவம் புரிந்து வரங்கள் பெற்றுத் தேவர்
முதலியோர்க்கு இடுக்கண் விளைத்துத் திரியாநின்றவன், ஒரு கால்
தன்னைக் கண்டஞ்சிய முனிவர்களைத் துரந்து வந்தனன். அப்பொழுது,
முனிவர்கள் சிவபெருமானைச் சரண்புக இறைவன் அவனைக் கொன்று
தோலையுரித்துப் போர்த்தருளினன் என்பது; இதனைக் கந்தபுராணத்துட்
காண்க. (44)
சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப
நனைய விழ்ந்தசெங் காந்தண்மே னாகிள வேங்கைச்
சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர்
அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய. |
(இ
- ள்.) சுனை - சுனையும், அகன்கரைச் சூழல்வாய் -
அதனகன்ற கரையின்கண், சூழ்கிடப்ப சுரும்பு - சுற்றி மொய்த்துக் கிடக்கும்
வண்டுகளும், பொன்தோற் தெண்நீர் கலம் கரி அனைய - பொன்னைக்
காய்ச்சித்தேய்க்கப் பெறுகின்ற தெளிந்த நீரையுடைய பாத்திரத்தையும்
கரியையும் ஒத்தன; நனை அவிழ்ந்த செங்காந்தள் மேல் - முகை விரிந்த
செங்காந்தள் மலர்மேல், நாகு இள வேங்கைச்சினை அவிழ்ந்தவீ கிடப்ப -
மிக்க இளமையாகிய வேங்கை மரத்தின் கிளையில் மலர்ந்த பூக்கள்
கிடப்பன, நெருப்பொடு சுடுபொன் இருந்து அனைய - நெருப்பின் மேல்
அதனாற் சுடப்படுகின்ற பொன் இருந்தால் ஒத்தன எ - று.
பொருளுக்
கியையச் சொற்கள் மாற்றி யுரைக்கப்பட்டது. இது
மொழிமாற் றெனப்படும். என்னை?
"மெமழிமாற் றியற்கை
சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய
முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்" |
என ஆசிரியர் தொல்காப்பியனார்
கூறினாராகலின். பின்னூலார்
இதனைக் கொண்டு கூட்டென்ப. நாகிள : ஒருபொரு ளிருசொல். கிடப்ப :
வினைப்பெயர். இருந்தாலனைய என்பது விகாரமாயிற்று. (45)
|