I


580திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) புண் இடை நுழைந்த வேலால் - பகைவருடலில் நுழைந்த
வேலினால், புணரியைப் புறங் கண்டோன்பால் - கடலைப் புறங்கொடுக்கச்
செய்த உக்கிர பாண்டியன் முன்னர், மண் இடை நின்ற சித்தர் -
நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, வான் இடை மறைந்து - விசும்பிலே
மறைந்து (பின்), ஞானக்கண் இடைநிறைந்து தோன்றும் கருணையால் -
ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திருவருளினால், வடிவம்
கொண்டு - திருவுருவந் தாங்கி, அணங்கினோடு - உமை யம்மையாரொடும்.
விண் இடை - வானின்கண், விடை இடை விளங்கி நின்றார் - இடப
ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார் எ - று.

     இறைவன் ஞானக்கண்ணில் நிறைந்து தோன்றுதலை,

"ஊனக்கண் பாச முணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி"

என்னும் சிவஞானபோதத்தா னறிக. இடை எல்லாம் ஏழனுருபு.
இச்செய்யுளை முன் மூன்றடியும் வேறுபடப் பாடங்கொண்டனர் இராமசுவாமிப்
பிள்ளை; அது,

‘புண்ணுடை வேலோ யாதித் தமிழ்ச்சங்கம் புணரி கொள்ள
மண்ணிடைச் சங்க மின்று வைத்தனங் கடைச்சங் கந்தான்
கண்ணிடைக் காணக் கங்கைக் கரையினா மென்று சித்தர்
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்’

என்பது (16)

முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.

     (இ - ள்.) முக்கணும் புயங்கள் நான்கும் - மூன்று கண்களையும்
நான்கு திருத்தோள்களையும், முளை மதிக் கண்ணி வேய்ந்த செக்கர் அம்
சடையும் - குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய
சடையையும், காளகண்டமும் - நீலகண்டத்தையும், தென்னன் தெரிந்து -
பாண்டியன் தரிசித்து, பக்கமே பணிந்து எழுந்து - அப்பக்கத்தையே நோக்கி
வணங்கி எழுந்து, பரந்த பேர் அன்பும் தானும் - விரிந்த பெரிய அன்பும்
தானுமாக, தக்க அஞ்சலிசெய்து ஏத்தி - விதிப்படி அஞ்சலி செய்து துதித்து,
தரைமிசை நடந்து செல்வான் - புவியின்மேல் நடந்து செல்கின்றான் எ - று.

     முளைமதி - குழவித் திங்கள்; புதுவதாகத் தோன்றிய மதி
யென்னலுமாம். தான் அன்புடன் என்பதனை ‘அன்புந் தானும்’ என்றார்;
அன்பும் தானுமாகச் செல்வானென்க; "நாணனு மன்பு முன்பு நளிர்வரை யேற"
என்றாற்போல அன்பிற்கொரு வடிவுகொடுத்துக் கூறினார். பக்கமே நடந்து
செல்வான் எனக் கூட்டினும் அமையும். (17)