I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்585



பன்னிரு ஆண்டு - பன்னிரண்டு ஆண்டுகள் வரை, வான் சுருக்கும் என்று
நூல்கள் பேசின - மழையில்லை என்று நூல்கள் கூறின (ஆதலால்), மாரி
பெய்விப்போன் சென்று கேண்மின் - மழையைப் பெய்விப்போனாகிய
இந்திரனிடத்திற் சென்று அவனைக் கேளுங்கள் எ - று.

     காய் சினம் - சுடுகின்ற சினமுமாம்; பரிதியின் வெம்மையைச்
சினமென்று கூறுதல் கவிமரபு. ஆதித்தன் செவ்வாய்க்கு முன்செல்ல வென்று
கூறுதற்கும் சொற்கிடக்கை இடந்தரும். தானவர்க்குக் குருவாகலின் ‘தேசிகன்’
என்றார். மிகவும் பின்னே தள்ளிச் செல்லுதலால் என்பது கருத்து; வெள்ளி
மழைக் கோளாதல் உணர்க. கேண்மின் - பெய்விக்கவேண்டுமெனக்
கேளுங்கள். (4)

என்றவ னெதிர்யா மெவ்வா றேகுது மென்றா ரைந்தும்
வென்றவன் சோம வார விரதநீர் நோற்று வெள்ளி
மன்றவ னருளைப் பெற்று வான்வழிச் சென்மி னென்றக்
குன்றவன் சிலையா னோன்பின் விதியினைக் கூறுகின்றான்.

     (இ - ள்.) என்றவன் எதிர் - என்று கூறிய அகத்திய முனிவனெதிரே,
யாம் எவ்வாறு ஏகுதும் என்றார் - யாங்கள் அங்கு எங்ஙனம் செல்வோம்
என்று வினாயினர்; ஐந்தும் வென்றவன் - (அதற்கு) ஐம்புலன்களையும்
வென்றவனாகிய குறுமுனிவன், நீர் சோமவார விரதம் நோற்று - நீவிர்
சோமவார விரதம் அனுட்டித்து, வெள்ளி மன்றவன் அருளைப் பெற்று -
வெள்ளியம்பலவாணன் திருவருளைப் பெற்றுக் கொண்டு, வான் வழிச்
சென்மின் என்று - வானின் வழியே செல்வீராக வென்று, அ குன்ற வன்
சிலையான் நோன்பின் விதியினை கூறுகின்றான் - அந்த மேருமாலையாகி
வலிய வில்லையுடைய சிவபிரானது விரதத்தின் விதியினைக் கூறுகின்றான்
எ - று.

     ஐந்து : தொகைக் குறிப்பு. சிலையானாகிய அவனது என்க. (5)

உத்தம வானோர் தம்மு ளுத்தம னாகு மீசன்
உத்தம சத்தி மாரு ளுத்தமி யுருத்தி ராணி
உத்தம விரதந் தம்மு ளுத்தமந் திங்க ணோன்பொன்
றுத்தம மறைநூ லாதி யுரைக்குமிச் சோம வாரம்.

     (இ - ள்.) உத்தம வானோர்தம்முள் ஈசன் உத்தமன் ஆகும் - மிக்க
மேன்மையுடைய தேவர்களுள் சிவபிரான் மேலோனாவன், உத்தம
சத்திமாருள் உருத்திராணி உத்தமி - மிக்க மேன்மையுடைய சத்திகளுள்ளே
உமாதேவியார் மேன்மையுடையராவர், உத்தம விரதம் தம்முள் - மிக்க
மேன்மையுடைய விரதங்களுக்குள்ளே, திங்கள் நோன்பு உத்தமம் -
சோமவார விரதம் மேன்மையுடையது. என்று உத்தம மறை நூல் ஆதி
உரைக்கும் - என்று மிக்க மேன்மையுடைய வேத முதலிய நூல்கள்
கூறாநிற்கும் : இச்சோமவாரம் - இந்தச் சோமவார விரதமானது எ - று.

     உத்தமம் - எல்லாவற்றிலும் சிறந்த தன்மை; மிக்க மேன்மை.
சோமவாரம் என்பது அடுத்த செய்யுளில் ‘தந்திடும் பயனில்’ என்பதனோடு
பொருந்தும். (6)