I


590திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இறைவனுடைய திருவைந்தெழுத்தைப் பெண்பாலுக்குப் பொருந்த உச்சாத்துப்
பூசித்து, ஆசு அறு சுரபித் தீம்பால் அட்ட இன் அமுதினோடும் - குற்றமற்ற
இனிய ஆன்பாலுடன் பலந்து சமைத்த இனிய திருவமுதுடன்.

     காசணியும் பொலம் பூணும் என்றுமாம். அங்கயற் கண்ணியாகிய
பராசக்தி. பாலுடன் கலந்து அட்டவென விரிக்க. (15)

பண்ணிய வகைபா னீய நிவேதனம் பண்ணி வாசம்
நண்ணிய வடைக்காய் நல்கி நறுவிரைத் தூபந் தீபம்
எண்ணிய வகையாற் கோட்டிக் கண்ணடி யேனை மற்றும்
புண்ணியன் றிருமுன் காட்டி வில்வத்தாற் பூசை செய்தல்.

     (இ - ள்.) பண்ணிய வகை பானீயம் நிவேதனம் பண்ணி - பல
காரவகைகளும் பானக்கமும் ஆகிய இவைகளை நிவேதித்து, சாவம் நண்ணிய
அடைக்காய் நல்கி - மணம் பொருந்திய தாம்பூலம் கொடுத்து, நறுவிரைத்
தூபம் தீபம் எண்ணிய வகையால் கோட்டி - நறிய மணமுள்ள தூபத்தையும்
தீபத்தையும் வரையறுத்தவாறு சுழற்றி, கண்ணடி ஏனை மற்றும் புண்ணியன்
திருமுன் காட்டி - கண்ணாடி முதலய மற்றை உபசாரங்களையும் சோமசுந்தரக் கடவுள் திருமுன் காண்பித்து, வில்வத்தால் பூசை செய்தல் - வில்வத்தினால் அருச்சனை செய்க.

     பண்ணியம் - பண்ணிகாரம். பானீயம் - பருகற்குரியது. கோட்டி
வளைத்து. கண்ணடியும் மற்று ஏனையவு மென்க. மற்று : அசை. செய்தல் :
வியங்கோள். (16)

புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ
மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி
அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள்
விரகில்வெய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம்.

     (இ - ள்.) புரகரன் இச்சாஞானக்கிரியையாய்ப் போந்த வில்வமர
முதல் அடைந்து - திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா ஞானக்
கிரியைவடிவாயுள்ள வில்வமரத்தினடியைச் சார்ந்து, மூன்று வைகல்
ஊண்உறக்கம் இன்றி - மூன்று நாட்கள்வரை உணவுந் துயிலும் இல்லாமல்,
அரகர முழக்கம் செய்வோர் - அரகரவென்று முழங்குவோர் செய்த,
ஐம்பெரும் பாதகங்கள் - ஐந்து பெரிய பாவங்களும், விரகு இல் செய்
கொலைகள் - அறிவின்றிச் செய்த கொலைப்பாவங்களும் தீரும் - நீங்கும்,
ஆதலால் - ஆகலின், வில்வம் விசேடம் - வில்வம் சிறந்தது.

     புரகரன் - புரத்தை யழித்தவன். வில்வ இலையின் மூன்று கவர்களும்
இறைவனுடைய மூன்று சத்திகளின் வடிவம் என்க. விரகின்மையாவது
அதனாற் றமக்கு ஊதியஞ் சிறிது மின்றி ஏதமே மிகுமென்னும் அறிவு
இல்லாமை;

"விரகின்மையின் வித்தட் டுண்டனை"

எனப் புறத்துள் வருதலுங் காண்க. கொலைகள் என வேறு கூறினமையால்
ஐம்பெரும் பாதகங்கள் அஃதல்லாத ஐந்தாதல் பெறப்படும். விரகிற்செய்
கொலைகள் எனப் பாட மிருப்பின் சூழ்ச்சியாற் புரிந்த கொலைகள் என்று
பொருள்படும். (17)