ஈதுநோற் பவர்வெம் பகைமனத் துயர்தீர்ந்
தாயிரம் பிறவியி லியற்றுந்
தீதுசேர் வினைதீர்ந் தெடுத்தயாக் கையினிற்
சிவகதி யடைவரிவ் விரதம்
ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்க
ளோக்கலோ டினிதுவாழ் தும்பர்
மேதகு பதினா லிந்திரன் பதத்தில்
வீற்றினி திருப்பரென் றறவோன். |
(இ
- ள்.) ஈது நோற்பவர் - இவ்விரதத்தை நோற்பவர், வெம்பகை
மனத்துயர் தீர்ந்து - கொடிய பகையும் மனத்துன்பமும் நீங்கி, ஆயிரம்
பிறவியில் இயற்றும் தீது சேர் வினை தீர்ந்து - அளவிறந்த பிறவிகளிற்
செய்த தீமை பொருந்திய வினைகள் நீங்கி, எடுத்த யாக்கையினில் சிவகதி
அடைவர் - எடுத்த பிறப்பிலேயே வீடுபேறெய்துவர்; இவ்விரதம் ஓதினோர்
கேட்டோர் - இவ்விரதத்தைக் கூறினவர்களும் கேட்டவர்களும், மனைவியர்
மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து - மனைவியர் புதல்வர் சுற்றத்துடன்
இன்பத்தோடு வாழ்ந்து, உம்பர் - தேவருலகில், மேதகுபதினால் இந்திரன்
பதத்தில் - சிறந்த பதினான்கு இந்திரப் பட்டமளவும் அவன் பதத்தில்,
இனிது வீற்றிருப்பர் என்று - இனிதாக வீற்றிருப்பாரென்று, அறவோன் -
அகத்திய முனிவன் (அருளிச்செய்தனன்) எ - று.
ஆயிரம்
- அளவின்மை. இவ்விரதத்தின் வரலாற்றையும் பயனையும்
ஓதினோரும் கேட்டோரு மென்க. அறவோன் அருளிச்செய்தனன் என
வருவித்து முடிக்க. (30)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
சொல்லிய
நெறியாற் சோம சுந்தரன் விரத நோற்பான்
வில்லிடு மணிப்பூண் வேந்தர் முனிவனை விடைகொண் டேகி
அல்லியங் கனகக் கஞ்சத் தாடியங் கயற்கண் வல்லி
புல்லிய பாகன் றன்னை வழிபடீஅப் போற்றி நோற்றார். |
(இ
- ள்.) சொல்லிய நெறியால் - அங்ஙனம் அவன் அருளிச் செய்த
முறைப்படி, சோம சுந்தரன் விரதம் நோற்பான் - சோமசுந்தரக் கடவுளுடைய
சோமவார விரதத்தை நோற்கும் பொருட்டு, வில் இடுமணிப் பூண் வேந்தர் -
ஒளிவீசும் மணிக்கலன்களை யணிந்த மன்னர் மூவரும், முனிவனை
விடைகொண்டு ஏகி - அம் முனிவனிடத்தில் விடைபெற்றுச் சென்று, அம்
அல்லி கனகக் கஞ்சத்து ஆடி - அழகிய அகவிதழ்களை யுடைய
பொற்றாமரை வாவியில் நீராடி, அங்கயற்கண்வல்லி புல்லிய பாகன்தன்னை
- அங்கயற்கண் அம்மையையும் அவர் ஒரு பாகத்திற் பொருந்திய
சோமசுந்தரக் கடவுளையும், வழிபடீஇப் போற்றி நோற்றார் - வழிபட்டுப்
பரவி அவ்விரதத்தை அனுட்டித்தார்கள் எ - று.
நோற்பான்
: வினையெச்சம். முனிவனை - முனிவன்பால். அல்லி :
தாமரை மலருக்கு அடை. (31)
|