I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்603



பொன்றத்து மருவிக் குன்றிற் புட்கலா வருத்த மாதி
மின்றத்து மேக நான்கும் வீழ்ந்தன மேயக் கண்டு
குன்றத்தி னெடிய திண்டோட் கொற்றவ னவற்றைப் பற்றிக்
கன்றத்திண் களிறு போலக் கடுந்தளை சிக்க யாத்தான்.

     (இ - ள்.) பொன் தத்தும் அருவிக் குன்றில் - பொன்னை (வாரிக்
கொண்டு) தாவும் அருவிகளையுடைய அம்மலையின்கண், புட்கலா வருத்தம்
ஆதி - புட்கலா வருத்தம் முதலிய, மின் தத்தும் மேகம் நான்கும் வீழந்தன
மேயக்கண்டு - மின் வீசும் முகில்கள் நான்கும் வீழ்ந்து மேய்வதைப் பார்த்து,
குன்றத்தின் நெடிய திண் தோள் கொற்றவன் - மலையினும் பெரிய
திண்ணிய தோளையுடைய உக்கிரவழுதி, அவற்றைப்பற்றி - அவற்றைப்
பிடித்து, கன்ற - வருந்துமாறு, திண்களிறு போல - யானைகளைப் போல,
கடுந்தளை சிக்க யாத்தான் - கடிய விலங்கால் அகப்படப் பிணித்து எ - று.

     மேகம் நான்கு - புட்கலா வருத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி
என்பன; இவை முறையே பொன், பூ, மண், கல் என்பவற்றைப் பொழிவன.
தளை - இருப்புத் தொடர். சிக்க - இறுக என்றுமாம். வீழ்ந்தன, யாத்தான்
என்பன முற்றெச்சங்கள். (41)

வேட்டத்திற் பட்ட செங்கண் வேழம்போற் கொண்டு போகிக்
கோட்டத்தி லிட்டா னாகக் குன்றிற கரிந்த வென்றி
நாட்டத்துப் படிவத் தண்ட நாடன்மற் றதனைக் கேட்டுக்
காட்டத்துக் கனல்போற் சீறிக் கடுஞ்சமர் குறித்துச் செல்வான்.

     (இ - ள்.) வேட்டத்தில் பட்ட செங்கண் வேழம் போல் -
வேட்டையில் அகப்பட்ட சிவந்த கண்களையுடைய யானையைக் கொண்டு
போதல் போல, கொண்டு போகிக் கோட்டத்தில் இட்டான் - கொண்டு
சென்று சிறைக்கோட்டத்தி லிட்டனன்; அதனை - அச் செய்தியை, குன்று
இறகு அரிந்த வென்றி - மலைகளின் சிறைகளை அறுத்த வெற்றியையுடைய,
நாட்டத்துப் படிவத்து அண்ட நாடன் கேட்டு - கண்கள் பொருந்திய
உடலையுடைய வான நாடனாகிய இந்திரன் கேட்டு, காட்டத்துக் கனல் போல்
சீறி - விறகிற் பற்றிய தீப் போல வெகுண்டு, கடுஞ்சமர் குறித்துச் செல்வான்
- கடிய போரைக் குறித்துச் செல்வானாயினான் எ - று.

     ஆக : அசை; இட்டானாக என எச்சமுமாம்.

திருமுருகாற்றுப்படையில்

"நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து"

எனவும், சிலப்பதிகாரத்தில்

"செங்கணா யிரத்தோன்"

எனவும் கூறப்பட்டுள்ளமை காண்க. மற்று : அசை, முகிலைச் சிறையிட்ட
தென்பது ஆராய்ச்சிக் குரியது. (42)