I


604திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வாங்குநீர் வறப்ப வேலை விடுத்ததும் வலிய வாரந்
தாங்கிய செருக்குங் காரைத் தளையிடு தருக்கு நோக்கி
ஈங்கொரு மனித யாக்கைக் கித்துணை வலியா தென்னா
வீங்கிய மான மூக்க மீனவன் மதுரை சூழ்ந்தான்.

     (இ - ள்.) வாங்கு நீர் வறப்ப வேலை விடுத்ததும் - வளைந்த கடல்
சுவற வேற்படையை விடுத்ததனையும், வலிய ஆரம் தாங்கிய செருக்கும் -
வலிய மாலையைத் தாங்கிய பெருமிதத்தையும், காரைத் தளை இடு தருக்கும்
நோக்கி - முகிலை விலங்கிட்ட செருக்கையும் நோக்கி, ஈங்கு ஒரு மனித
யாக்கைக்கு இத்துணை வலியாது என்னா - இங்கு ஒரு மனித உடம்பிற்கு
இவ்வளவு வலிமை வந்தது என்னை என்று, வீங்கிய மானம் ஊக்க -
மேலேழுந்த மானம் செலுத்த, மீனவன் மதுரை சூழ்ந்தான் - பாண்டியனது
மதுரையை வளைந்தான் எ - று.

     வெறுப்பால் ‘ஈங்கொரு மனிதயாக்கை’ என இகழ்ந்தா னென்க.
ஊக்க - ஊக்க முண்டாக்க, செலுத்த. (43)

[கலிவிருத்தம்]
ஓடின ரொற்றர்போய்ச் செழிய னொண்கழல்
சூடினர் நகர்ப்புறஞ் சுரர்கள் சேனைகள்
மூடின வென்னலு முனிவு மானமும்
நீடின னரியணை யிருந்து நீங்குவான்.

     (இ - ள்.) ஒற்றர் ஓடினர் போய் - ஒற்றர்கள் ஓடிச்சென்று, செழியன்
ஒண்கழல் சூடினர் - பாண்டியனின் ஒள்ளிய திருவடிகளைச் சிரத்திற்சூடி.
நகர்ப்புறம் சுரர்கள் சேனைகள் மூடின என்னலும் - நகரின் புறத்தே தேவர்
படைகள் வளைந்தன என்று கூறலும், முனிவும் மானமும் நீடினன் -
கோபமும் மானமும் மிக்கவனாய், அரி அணை இருந்து நீங்குவான் -
சிங்காதனத்தினின்றும் நீங்கிப் போருக்குச் செல்கின்ற அப்பாண்டியன்
எ - று.

     ஓடினர், சூடினர், நீடினன் என்பன முற்றெச்சங்கள். நீங்குவான் :
பெயர். (44)

பண்ணுக தேர்பதி பகடு வீரத் முன்
நண்ணுக கடிதென நடத்தி யாவரென்
றெண்ணலன் மதமலை யெருத்த மேற்கொடு
கண்ணகன் கடிநகர்க் காப்பு நீங்குமுன்.

     (இ - ள்.) தேர் பரி பகடு பண்ணுக - தேரையும் குதிரையையும்
யானையையும் பண்ணுக, வீரர் கடிது முன் நண்ணுக - வீரர்கள் விரைந்து
முன் செல்லுக, என - என்றுகூறி, நடத்தி - (அவற்றை) முன்னே நடப்பித்து,
யாவர் என்று எண்ணலன் - போருக்கு வந்தவர் யாவர் என்று கருதாது,
மதமலை எருத்தம் மேற்கொடு - யானையின் பிடரியிலேறி, கண் அகன்
கடிநகர் காப்பு நீங்கு முன் - இடமகன்ற விளக்கமுற்ற நகரின் காவலாகிய
மதிலைக் கடக்கு முன் எ - று.