பண்ணுதல்
- புறப்படுதற் கேற்பச் சமைத்தல், ஒப்பனை செய்தல்.
அகன் : மரூஉ. (45)
அடுத்தனர்
வானவ ரார்த்துப் பல்படை
எடுத்தனர் வீசினர் சிலையி லெய்கணை
தொடுத்தன ரிறுதிநாட் சொரியு மாரிபோல்
விடுத்தனர் மதிக்குல வீரன் சேனைமேல். |
(இ
- ள்.) வானவர் அடுத்தனர் ஆர்த்து - தேவர்கள் நெருங்கி
ஆரவாரித்து, பல்படை எடுத்தனர் வீசினர் - பல படைகளையும் எடுத்து
வீசி, சிலையில் எய்கணை தொடுத்தணர் - வில்லின்கண் எய்யுங்
கணைகளைத் தொடுத்து, மதிக்குல வீரன் சேனைமேல் - சந்திர குலத்து
வீரனாகிய உக்கிர வழுதியின் சேனையின்மேல், இறுதிநாள் சொரியும்
மாரிபோல் விடுத்தனர் - ஊழிக்காலத்திற் பொழியும் மழைபோலச்
சொரிந்தார்கள் எ - று.
வானவர்
வீரன் சேனைமேல் மாரிபோல் விடுத்தனர் என்க. முற்றுக்கள்
எச்சமாய் வருவன காண்க. (46)
ஆர்த்தனர் மலயவெற் பரையன் சேனையோர்
பார்த்தனர் வேறுபல் படைக்க லக்குவை
தூர்த்தனர் குனிசிலை தொடுத்து வாளியாற்
போர்த்தன ரமரர்மெய் புதைத்த வென்பவே. |
(இ
- ள்.) மலய வெற்பு அரையன் சேனையோர் ஆர்த்தனர் -
பொதியின் மலையையுடைய பாண்டியன் படைவீரர் ஆரவாரித்து பார்த்தனர்
வேறுபல் படைக்கலக் குவை தூர்த்தனர் - பார்த்து வெவ்வேறு
பலபடைக்கலக் கூட்டங்களை வீசி, குனி சிலை தொடுத்து வாளியால்
போர்த்தனர் - வளைந்த வில்லிற்பூட்டி அம்புகளால் மூடினர்; அமரர்
மெய்புதைத்த (அவ்வம்புகள்) தேவர்கள் மெய்யில் தைத்தன எ - று.
பார்த்தனர்
- ஆராய்ந்து; வானவர் விடுத்தமையை நோக்கி என்றுமாம்.
புதைந்த வென்பது புதைத்த வென வலிந்தது; மெய்யை மறைத்தன
என்னலுமாம். என்ப, ஏ : அசைகள். (47)
தறிந்தன தாள்சிரந் தகர்ந்த தோள்கரம்
பறிந்தன குருதிநீர் கடலிற் பாய்ந்தன
செறிந்தன பாரிடஞ் சேனங் கூளிகள்
முறிந்தன வானவர் முதல்வன் சேனையே. |
(இ
- ள்.) தாள் தறிந்தன - (சிலருக்குக்) கால்கள் அறுபட்டன; சிரம்
தகர்ந்த - (சிலருக்குத்) தலைகள் உடைந்தன; தோள் கரம் பறிந்தன -
(சிலருக்குத்) தோளும் கையும் குறைபட்டன; பாரிடம் சேனம் கூளிகள்
செறிந்தன - பூதங்களும் பருந்துகளும் பேய்களும் வந்து நெருங்கின;
வானவர் முதல்வன் சேனை முறிந்தன - தேவர் தலைவனாகிய இந்திரன்
சேனைகள் நிலைகெட்டோடின எ - று.
பறிதல்
- நீங்குதல். முறிதல் - கெடல். (48)
|