I


608திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     காய் சினம் - சுடு சினம்; மிக்க சினம். கூசினன் - நாணினனாய் :
முற்றெச்சம். வீரனென்றது இகழ்ச்சிக் குறிப்பு; முன்பு வீரனானவன் என்றுமாம்.
இந்திரன் முடியைத் தகர்த்த இச்செய்தி;

"வச்சிரத் தடக்கை யமரர் கோமான்
உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை"

என்று சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுளது. (53)

இந்திரண் டனைய கூர்ம்பல் லிருள்வரை நெஞ்சு போழ்ந்த
மைந்தனில் வலிய காளை வரைந்தெறி நேமி சென்னி
சிந்திடா தாகி யம்பொன் மணிமுடி சிதறச் சோம
சுந்தர நாதன் பூசைத் தொழிற்பய னளித்த தென்னா.

     (இ - ள்.) இரண்டு இந்து அனைய கூர்ம்பல் - இரண்டு பிறைமதி
போன்ற கூரிய பற்களையுடைய, இருள் வரை நெஞ்சுபோழ்ந்த -
மயக்கத்தைச் செய்யும் மலை வடிவாயுள்ள கிரவுஞ்சனது நெஞ்சைப் பிளந்த,
மைந்தனின் வலிய காளை - முருகக் கடவுள் போலும் வலியுடைய
உக்கிரவழுதி, வரைந்து எறி நேமி - கையிற்கொண்டு எறிந்த
திகிரிப்படையானது, சென்னி சிந்திடாதாகி - தலையைச் சேதிக்காமல்,
அம்பொன் மணி முடி சிதற - அழகிய பொன்னாலாகிய மணிகள் பதித்த
முடியையே சிதறுமாறு, சோமசுந்தர நாதன் பூசைத்தொழில் பயன் அளித்தது
என்னா - சோமசுந்தரக் கடவுளின் பூசைப்பயன் காத்தது என்று எ - று.

     அசுரனாகிய வரை யென்பார் ‘கூர்ம்பல் இருள் வரை’ என்றார்
எனலுமாம். கூர்ம்பல், மெல்ரெழுத்து மிக்கது;

"ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்"

(தொல்) என்பதன் இலேசாற் கொள்க. பூசையாகிய நல்வினையின் பயன்.
(54)

போரினுக் காற்றா தோடிப் பொன்னகர் புகுந்த வென்றித்
தாரினுக் கிசைந்த கூர்வேற் சதமகன் பின்பு நின்னாட்*
டூரினுக் கெல்லா மாரி யுதவுவே னிகள நீக்கிக்
காரினைத் தருக வென்னாக் கவுரியற் கோலை விட்டான்.

     (இ - ள்.) போரினுக்கு ஆற்றாது ஓடி - போருக்கு ஆற்றாது புறங்
கொடுத்தோடி, பொன் நகர் புகுந்த - பொன்னுலகிற் புகுந்த, வென்றித்
தாரினுக்கு இசைந்த - வெற்றி மாலைக்கு அமைந்த, கூர்வேல் சதமகன் -
கூரிய குலிசப் படையை யுடைய இந்திரன், பின்பு - பின், நின்நாட்டு
ஊரினுக்கு எல்லாம் மாரி உதவுவேன் - நினது நாட்டிலுள்ள ஊர் முழுதுக்கும்
மழைவளந் தருவேன்; நிகளம் நீக்கிக் காரினைத் தருக என்னா -
விலங்கினின்றும் நீக்கி முகில்களைத் தருவாயாக என்று, கவுரியற்கு ஓலை
விட்டான் - உக்கிரவழுதிக்குத் திருமுகம் அனுப்பினான் எ - று.


     (பா - ம்.) * தன்னாட்.