I


மேருவைச் செண்டாலடித்த படலம்619



     (இ - ள்.) தண்டக நாடு தள்ளி - தொண்டை நாட்டைக் கழித்து,
தெலுங்க நாடு அகன்று - தெலுங்க நாட்டினீங்கி, சாய் தாள் கண்டகம்
கைதை வேலிக் கருநடம் கடந்து - வளைந்த அடியையும் முள்ளையு முடைய
தாழையை வேலியாகவுடைய கருநட நாட்டைக் கடந்து, காடும் தொண்டகம்
துவைக்கும் குன்றும் நதிகளும் துறந்து - காடும் தொண்டகப்பறைஒலிக்கும்
மலையும் ஆறுகளுமாகிய இவற்றை நீத்து, கண்வாய் வண்டு அகம்
மலர்க்காவேலி - தேன் பொருந்தியவண்டுகளைத் தம்மிடத்திலுற்ற மலர்கள்
நிறைந்த சோலைகளை வேலியாகவுடைய, மாளவதேச நண்ணி - மாளவ
தேயத்தைச் சேர்ந்து எ - று.

     தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை. கள்வாய் மலர் என்க. (17)

அங்குநின் றெழுந்து தீவா யருஞ்சுர நெறிப்பட டேகி
மங்குனின் றதிருஞ் செம்பொன் மாடநீள் விராட நண்ணிக்
கொங்குநின் றவிழுங் கானங் குன்றொரீஇ வாளை பாயத்
தெங்குநின் றிளநீர் சிந்து மத்திய தேயத் தெய்தி.

     (இ - ள்.) அங்கு நின்று எழுந்து - அந்நாட்டினின்றும் புறப்பட்டு,
தீவாய் அருஞ்சுரம் நெறிப்பட்டு ஏகி - தீவாய்ந்த செல்லுதற்கரியபாலை
நிலத்தின் வழிப்பட்டுச் சென்று, மங்குல் நின்று அதிரும் செம்பொன் மாடம்
நீள்விராடம் நண்ணி - முகில் நின்று முழங்கும் சிவந்த பொன்னாலாகிய
மாடங்கள் நெருங்கிய விராட நாட்டை யடைந்து, கொங்கு நின்று அவிழும்
கானம் குன்று ஒரீஇ - மகரந்தம் பொருந்தி மலரும் மலர்கள் நிறைந்த
முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் நீங்கி, வளை பாயத் தெங்கு
நின்று இளநீர்சிந்தும் - வாளை மீன் பாய்தலினால் தென்னைமரத்தினின்றும்
இளநீர் சிந்தா நின்ற, மத்திய தேயத்து எய்தி - மத்திய தேசத்தை யடைந்து
எ - று.

     கொங்கு நின்றவிழும் என்றமையால் மலர்கொள்க. தெங்கினின்று
எனற்பாலது சாரியையின்றி நின்றது; தெங்கு சிந்தும் என்னலுமாம்;
இருக்கருத்து,

"வாளை தாவிமுப் புடைக்காய்த் தெங்கின்
படுபழ முதிர்க்குஞ் சூழற் பல்லவதேய வேந்தே"

என நைடதத்தில் வந்துளது. (18)

அந்நெடு நாடு நீங்கி யாடலே றுயர்ந்த தோன்றல்
பொன்னெடுஞ் சடையிற் றாழ்ந்து புனிதமாந் தீர்த்த காசி
நன்னெடு நகர மெய்தி நளிர்புனற் கங்கை நீந்திக்
கன்னெடு நெறிய னேய காவதங் கடந்த பின்னர்.

     (இ - ள்.) அந்நெடு நாடு நீங்கி - அந்த நெடிய நாட்டினைக் கடந்து,
ஆடல் ஏறு உயர்த்ததோன்றல் - வெற்றியையுடைய இடபக்கொடியை
உயர்த்திய சிவபெருமானது, பொன் நெடுஞ் சடையில் தாழ்ந்து - பொன்
போன்ற நீண்ட சடையினின்றும் இழிந்து, புனிதம் ஆம் தீர்த்தம் -
தூய்மையாகிய கங்கையை யுடைய, காசி நல் நெடு நகரம் எய்தி - நல்ல
நெடிய காசிப்பதியை அடைந்து, நளிர் புனல் கங்கை நீந்தி - குளிர்ந்த