I


62திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சாந்தும் அளைந்த - குங்குமப்பூக்கலந்த கலவையும் கத்தூரிகலந்த
சந்தனமும் அளையப்பெற்ற, தெண்திரைப் பொருநையோ - தெளிந்த
அலைகளையுடைய பொருநையாறு மட்டுமா (கமழ்வது), அந்நதி ஞாங்கர்
விளைந்த - அவ்வாற்றின் பக்கங்களில் விளைந்த. செந்நெலும் கன்னலும் -
செந்நெல்லும் கரும்புங்கூட, அவ்வாசம் வீசும் - அவற்றின்மணங் கமழா
நிற்கும் எ - று.

     காசறை - கத்தூரி. அளைதல் - விரவுதல். பொருநையோ என்பதில்
ஓகாரம் பிரிநிலைப் பொருளது. (53)

பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ்
பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர்
மதியி லேவிளை கின்றன மறைமுதல் பத்தி*

     (இ - ள்.) சந்தனம் - சந்தன மரங்கள், பொதியிலே விளைகின்றன -
பொதியின்மலையின்கண்ணே உண்டாகின்றன; முத்தம் - முத்துக்கள்,
பொதியின் நதியிலே விளைகின்றன - பொதியின்மலையினின்றும் வருகின்ற
பொருறையாற்றின் கண்ணே உண்டாகின்றன; தருமம் - அறங்கள்,
அந்நதிசூழ் பதியிலே விளைகின்றன - அப்பொருநையாற் சூழப்பெற்ற
நகரங்களிலே உண்டாகின்றன; மறைமுதல் பத்தி - வேத முதல்வனாய
சிவபிரான் திருவடிகளிற் பத்திகள், அப்பதியோர் மதியிலே விளைகின்றன -
அந்நகரத்தோர் அறிவின்கண்ணே உண்டாகின்றன எ - று.

     பொதியின் சந்தனமும்; தென்கடலில் முத்தும் உண்டாவன வென்று
தொன்னூல்கள் கூறாநிற்கும்;

"குடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
தென்கடன் முத்தும் குணகடற் றுகிரும்"

என்பது பட்டினப்பாலை. மறைமுதல் - சிவபெருமான்; முன்னரும்
‘மறைமுதலடியார் தம்மை’ எனக் கூறியது காண்க. பத்தி, பலதிறப்
படுமாகலின் பன்மை கூறினார். பொதியிலில் என்னும் ஏழனுருபு
தொக்கது. (54)

கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ.

     (இ - ள்.) கடு கவின்பெறு கண்டனும் - நஞ்சினால் அழகுபெற்ற
திருமிடற்றையுடைய இறைவனும், தென்திசை நோக்கி - தென்திசையைக்
குறித்து, அடுக்க வந்துவந்து ஆடுவான் - நெருங்க வந்துவந்து ஆடுதல்,
ஆடலின் இளைப்பு விடுக்க - திருநிருத்தத்தாலுண்டாகிய மெலிவை
நீக்குதற்பொருட்டு, ஆரம் மென் கால்வீசி - சந்தனச்சோலையிற் படிந்து


     (பா - ம்.) * மறைமுதற் பத்தி.