புடைத்தபின் மேருத் தெய்வம்
புடைக்குல வரையெட் டென்னப்
படைத்தவெண் டோளு நான்கு
முடியுமேற் படுவெண் சோதி
உடைத்தனிக் குடையுங் கொண்ட
வுருவினோ டெழுந்து நாணிக்
கிடைத்தது கருணை வேந்தன்
கிளர்சினந் தணிந்து நோக்கா. |
(இ
- ள்.) புடைத்தபின் மேருத் தெய்வம் - (அங்ஙனம்) அடித்த
பின்பு மேருமலைத் தெய்வமானது, புடைக்குல வரை எட்டு என்ன -
பக்கலிலுள்ள குலவரைகள் எட்டினையும் போல, படைத்த எண் தோளும் -
கொண்ட எட்டுத் தோள்களும். நான்கு முடியும் - நான்கு தலைகளும்,
மேல்படு வெண் சோதி உடைத்தனிக் குடையும் - மேலே கவிக்கும்
வெள்ளிய ஒளியையுடைய ஒப்பற்ற குடையும் ஆகிய இவைகளை, கொண்ட
உருவினோடு எழுந்து நாணிக்கிடைத்தது - கொண்ட வடிவத்தோடு எழுந்து
வெள்கி எதிர்ப்பட்டது; கருணை வேந்தன் - அருளையுடைய உக்கிர
பாண்டிய வேந்தன், கிளர் சினம் தணிந்து நோக்கா - மிக்கு எழுந்த சினந்
தணிந்து நோக்கி எ - று.
மேருத்
தெய்வம் - மேருவாகிய தெய்வம், மேருவின் அதி தெய்வம்.
கிடைத்தது - அடுத்தது. (28)
இத்தனை வரவு தாழ்த்த தென்னென மேருத் தெய்வம்
வித்தக நம்பி கேட்டி மீனெடுங் கண்ணி யோடும்
பைத்தலை யரவும் பூண்ட பரனையிப் படிவங் கொண்டு
நித்தலும் போகிப் போகி வழிபடு நியமம் பூண்டேன். |
(இ
- ள்.) இத்தனை வரவு தாழ்ந்தது என் என - இதுவரை நினது
வரவு தாழ்த்ததற்குக் காரணம் யாதென்று வினவ, மேருத் தெய்வம் - அம்
மேருத் தெய்வமானது, வித்தக நம்பி கேட்டி - சதுரப்பா டுடைய நம்பியே
கேட்பாயாக, மீன் நெடுங் கண்ணியோடும் பைத்தலை அரவம் பூண்ட பரனை
- அங்கயற்கண் ணம்மையோடும் படத்தையுடைய தலையினை யுடைய
பாம்பை அணிந்த சோமசுந்தரக் கடவுளை, இ படிவம் கொண்டு நித்தலும்
போகிப் போகி வழிபடும் நியமம் பூண்டேன் - இந்த வடிவத்தோடும்
நாடோறும் சென்று சென்று வழிபடும் நியதியைக் கொண்டிருந்தேன் எ - று.
தாழ்த்தது
என் - தாழ்த்தமைக்குக் காரணம் என். வித்தகம் -
சதுரப்பாடு.
என்பதற்குப் பரிமேலழகர்
கூறிய உரையை நோக்குக. அடுக்கு இடை
விடாமைப் பொருட்டு. (29)
|