I


மேருவைச் செண்டாலடித்த படலம்629



பொன்மலைக் கடவு ளீந்த புண்ணிய நிதியை யந்த
நன்மலை மானக் கூப்பி நல்கிப்பல் குடியு மோம்பித்
தென்மலைக் கிழவன் றெய்வந் தென்புல வாண ரொக்கல்
தன்மனை விருந்து காத்துத் தருக்கினா னிருக்கு நாளில்.

     (இ - ள்.) பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை - (பின்பு)
மேருமலைத் தெய்வம்கொடுத்த அத்தூய்மையாகிய பொருளை, அந்த
நல்மலை மானப் கூப்பி - அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்து,
பல் குடியும் நல்கி ஓம்பி - பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து,
தென்மலைக் கிழவன் - பொதியின் மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி,
தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து -
தெய்வத்தையும் தென்புலத்தாரையும் சுற்றத்தாரையும் தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் - களிப்புடன்
இருக்கும் காலத்தில் எ - று. புண்ணிய நிதி - குற்றமற்ற நிதி; அறஞ்செய்தற்
குரிய நிதியுமாம். தென்புல வாணர் - பிதிரர்; வாழ்நர், வாணர் என மருவிற்று.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை"

என்னும் குறளிற் கூறியவற்றுள் தன்னை யொழித்துக் கூறினார்; தான் என்றது
தன் மனைவி மக்கள் முதலாயினாரை யெனக் கருத்துக் கொண்டு ‘தன்
மனை’ எனக் கூறினா ரென்னலுமாம். ஆன் : ஒடுவின் பொருட்டு. (39)

ஐவினை நடாத்துமீச னாணையா னடக்குங் கோளுஞ்
செய்வினைத் திரிவு மாறத் தென்னனா டெங்கு மாரி
பெய்வினை யுடைய தாகிப் பெருவளம் பகிர்ந்து நல்க
உய்வினை யுடைய வாகி யுயிரெலாந் தழைத்த வன்றே.

     (இ - ள்.) ஐவினை நடாத்தும் ஈசன் ஆணையால் நடக்கும் கோளும்
- ஐந்து தொழில்களையும் நடாத்தும் சிவபிரான் ஆணையின்ால் நடவாநின்ற
கோள்களும், செய்வினைத் திரிவு மாற - செயற்கையாகிய நிலைமாறுதற்
றொழிலினின்றும் நீங்குதலால், தென்னன் நாடு எங்கும் - பாண்டியனது நாடு
முழுதும், மாரி பெய்வினை உடையதாகி - மழை யானது பொழியுந் தொழிலை
யுடையதாகி, பெருவளம் பகிர்ந்து நல்க - பெரிய வளத்தைப் பங்கிட்டளிக்க,
உயிர் எலாம் உய்வினை உடையவாகித் தழைத்த - எல்லா வுயிர்களும்
(பசியினீங்கிப்) பிழைத்தலுடையனவாய்ப் பல்கின எ - று.

     ஐவினை - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
என்பன. செய் - செயற்கையை யுணர்த்திற்று; முன்செய்த என்றுமாம். திரிவு
வினையென மாறுக. கோளும் உயிர்களின் வினையும் திரிவுமாற
என்றுரைத்தலுமாம். பெய்வினை - பெய்தலை யென்றுமாம்; இதற்குப் பெய்வு
தொழிற்பெயர், இன் : சாரியை. பகிர்ந்து நல்க - எவ்வுயிர்க்கும் நல்க
வென்னுங் குறிப்பிற்று. தழைத்தல் - பெருகல். அன்று, ஏ : அசைகள். (40)