I


644திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) ஏதம் இல் பவித்திரம் வலக்கரன் அமைப்ப - குற்றமில்லாத
பவித்திரம் வலத்திருக்கையில் விளங்கவும்; போதம் வரை புத்தகம் இடக்கை
பொற்ப - சிவஞானபோதம் எழுதப்பெற்ற திருமுறை இடத் திருக்கரத்தில்
அழகு செய்யவும், ஓதி உணராது அலறி ஓலமிடும் வேதம் - பலவாறு கூறி
அறியாது கதறி ஓலமிடுகின்ற மறைகள், பாதுகைகளாகி இருபாத மலர் சூட
- பாதுகைகளாகி இரண்டு திருவடி மலர்களையும் சூடவும் எ - று.

     கையது : அது பகுதிப்பொருள் விகுதி; கையினிடத்ததாய் என
வுரைத்தலுமாம். ஓதவும் உணரவும் கூடாமல் எனினுமாம். வேதங்கள்
இறைவனை உணரப் பெறாமல் ஓலமிடுதலை,

"அருமறை முறையிட் டின்னு மறிவதற் கரியான்"

என்றும்,

"மயக்கறு மறையோவிட்டு மாலயன்றேட நின்றான்"

என்றும் திருத்தொண்டர்புராணங் கூறுதல் காண்க. இறைவனை அறிய
மாட்டாது ஓலமிட்ட வேதங்கள் இப்பொழுது ஓர் உபாயத்தையுன்னிப்
பாதுகைகளாயின என்றார். மலர் என்றதற்கேற்பச் சூட என்றார். போதம்
வரை புத்தகம் இடக்கையிற் பொற்ப என்றும், ஓலமிடும் வேதம் பாதமலர்
சூட என்றும் கூறியது சிவஞான போதத்திற்கும் வேதத்திற்குமுள்ள வாசியை
விளக்கியவாறு மாயிற்று. (21)

கள்ளமுள ரிக்குண்முரல் காளையறு கால
புள்ளொலியி னாவுமித ழும்புடை பெயர்ந்து
துள்ளவெழு வேதவொலி தொண்டர்செவி யாற்றால்
உள்ளவயல் புக்குவகை யொன்பயிர் வளர்ப்ப.

     (இ - ள்.) கள்ள முளரிக்குள் முரல் அறுகால காளை புள் ஒலியின்
- தேனையுடைய கமல மலரினுள் முழங்கும் ஆறு கால்களை யுடைய ஆண்
வண்டின் ஒலிபோல, நாவும் இதழும் புடைபெயர்ந்து துள்ள எழு வேத ஒலி
- நாவும் இதழும் எழுந்து துள்ளத்தோன்றும் மறை யொலியானது,
தொண்டர்செவி ஆற்றால் - அடியார்களின் செவியாகிய கால்வழியால் ஓடி,
உள்ளம் வயல் புக்க - உள்ளமாகிய கழனியிற் பாய்ந்து, உவசை ஒண்பயிர்
வளர்ப்ப - மகிழ்ச்சியாகிய ஒள்ளிய பயிரை வளர்க்கவும் எ - று.

     கள்ள - தேனையுடைய : குறிப்புப் பெயரெச்சம்; கால என்பதும்
அது. முளரி மலருக்கு ஆகுபெயர். காளையாகிய புள் எனக் கூட்டுக. புள்
- வண்டு. வேதவொலி திருவாயினுள்ளிருந்து வருதலின் அதற்கேற்ப
முளரிக்குள் முரல் ஒலியின் என்றார். வேத வொலியாகிய நீர் என்க.
உருவகவணி. (22)

சீதமணி மூரறிரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி யாயளவி னான்மறையி னந்த
போதவடி* வாகிநிறை பூரண புராணன்.

     (பா - ம்.) * போதமுடி.